பதிவு செய்த நாள்
25
நவ
2011
11:11
திருப்பூர் : பாரப்பாளையத்தில் குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த முனியப்பன் கோவிலை இடிக்க, இந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒத்திவைக்கப்பட்டது.திருப்பூரில் நொய்யல் ஆற்றில் அணைக்காடு பகுதியில் தண்ணீர் செல்லும் வழியை மறித்து கட்டப்பட்டிருந்த 104 வீடுகளை அதிகாரிகள் இடித்து தரைமட்டமாக்கினர். அணைக்காடு பகுதியில் இருந்த மூன்று கோவில்களையும் இடித்தனர். அதேபோல், மூளிக்குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த எட்டு வீடுகளையும் அகற்றினர். மண்ணரை பாரப்பாளையம் பகுதியில் இருந்த ஓடை முனியப்பன் கோவிலை இடிக்கச் சென்றனர். அதற்கு இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், "இக்கோவில் பழமைவாய்ந்தது; எல்லை காவல் தெய்வமும் கூட. மூலவராக மூன்றடி உயரமுள்ள முனியப்பன் சாமியும், தலா 30 அடி உயரமுள்ள பிரமாண்டமான இரண்டு அய்யனார் சிலைகளும், தலா 15 அடி உயரமுள்ள இரண்டு குதிரை வாகனங்களும் உள்ளன. இவற்றை முறையாக பாலாலயம் செய்யாமல்கூட அகற்றுவதா; நீர் வழித்தடத்தை மறித்து வீடுகள் இருந்ததை அகற்றுவதில் பிரச்னை இல்லை; கோவிலால் குளத்துக்கு பாதிப்பு இல்லை. குளத்தின் கரையில் இருக்கும் தெய்வம்தான் இது, என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.இந்து முன்னணியினர், பொதுமக்கள் 100 பேர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினர். "அரசு உயரதிகாரிகளிடம் பேசி அனுமதி பெற வேண்டும்; இல்லையெனில், 26ம் தேதி கோவில் அகற்றப்படும், என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். "முனியப்பன் கோவிலை அகற்றக்கூடாது என்ற கோரிக்கையை கலெக்டரின் நேர்முக உதவியாளர் மோகன்தாஸிடம் மனு அளித்தனர். குளத்தில் தண்ணீர் தேங்க பாதிப்பு என்பதால், அங்கிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. ஆனால், குளத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத, ஏராளமானோர் வழிபாடு செய்யும் கோவிலை இடிக்கக் கூடாது என்று தெரிவித்தனர். கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாகவும், அதில் எந்த சலுகையும் அளிக்க முடியாது, என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்படியானால், கோர்ட் உத்தரவை காண்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டனர். பொதுப்பணித்துறை பொறியாளர் ரவிச்சந்திரன் வரவழைக்கப்பட்டு, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. கோர்ட் உத்தரவுப் படி, அனைத்து நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும் என்பதை அவர் விளக்கினார்.இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: கோவில் அகற்றும் முடிவுக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. வீடுகள் மற்றும் இதர கட்டடங்களை அகற்றியதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. கோவிலை இடிப்பது மக்களின் நம்பிக்கைக்கு எதிரான செயலாக உள்ளது. கோர்ட் பிறப்பித்த உத்தரவில், நீர்நிலைப் பகுதிகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இப்பகுதியில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இதேபோல் நொய்யல் ஆறு மற்றும் பிற பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும். அதற்கு ஏன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை, என்றார்.