பதிவு செய்த நாள்
25
நவ
2011
11:11
திருத்தணி:வடாரண்யேஸ்வரர் கோவிலில் நடந்த தெப்பத் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஐந்து திருச்சபைகளுள், முதற்சபையான ரத்தின சபையாக விளங்குகிறது, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில். கார்த்திகை மாதம் சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவையொட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மாலை 6 மணிக்கு, வண்டார்குழலியம்மன், வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, மாட வீதிகள் வழியாக, ஊர்வலமாக கோவிலின் பின்புறம் உள்ள சென்றாடு திருக்குளத்திற்கு வந்தடைந்தது. மாலை 6.30 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், வண்டார்குழலியம்மன், வடாரண்யேஸ்வர சுவாமி எழுந்தருளினார். அங்கு, சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில் இணை ஆணையர் தனபால், தெப்பத்தை துவக்கி வைத்தார். தெப்பத்தில், டி.எல்.மகாராஜன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. தெப்பம், குளத்தை சுற்றி மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தது. நிகழ்ச்சியில், திருவாலங்காடு ஒன்றிய சேர்மன் குணாளன், துணை சேர்மன் நாகம்மாள் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.தாமரைக் கொடியில் சிக்கியதுதெப்பத் திருவிழா நிகழ்ச்சியில், தெப்பம் இரண்டாவது சுற்று சென்ற போது, குளத்தில் உள்ள தாமரைக் கொடியில் சிக்கியது. ஒன்றரை மணி நேரம் கழித்து, கொடிகளை அகற்றிய பின், மூன்று முறை வலம் வந்தது.