பதிவு செய்த நாள்
07
ஆக
2017
02:08
ஆர்.கே.பேட்டை:வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பம் கிராமங்களில் உள்ள அன்னியம்மன் கோவில்களில், இன்று பெரியாண்டவர் பூஜையுடன், ஆடி பொங்கல் திருவிழா நடைபெற உள்ளது.வேலுார் மாவட்டம், காவேரிபாக்கம் அருகே உள்ளது சேரி அய்யம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தில், அம்மனியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆர்.கே.பேட்டை, வங்கனுார், அம்மயைார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள், அன்னியம்மனை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பத்தில், சேரி அய்யம்பேட்டையில் உள்ளது போன்றே, அன்னியம்மன் கோவில்கள் கட்டப்பட்டன. ஆடி பொது பொங்கல், இன்று காலை, வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பம் அன்னியம்மன் கோவில்களில் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைக்கின்றனர். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு மிக்க பெரியாண்டவர் பூஜை நடக்கிறது. கோவில் வளாகத்தில் களி மண்ணால் செய்யப்பட்ட பிரமாண்டமான பெரியாண்டவர் சிலைக்கு, வழிபாடு நடைபெற உள்ளது.