பதிவு செய்த நாள்
08
ஆக
2017
03:08
வசந்த ருதுவின் துவக்க நாள் வசந்த பஞ்சமி. இதுவே, ஞானாம்பிகையான அன்னை சரஸ்வதி தேவி அவதரித்த தினம் என்பர். இந்நன்னாளில் சரஸ்வதி தேவிக்கு வழிபாடு செய்வது குறித்து வேதங்களும் புராணங்களும் கூறுகின்றன. அன்னை சரஸ்வதி தேவியின் அருளால்தான் ஞானம் கிட்டும். மகரிஷி வேதவியாசர், பரத்வாஜர், பராசர், வசிஷ்டர், பிரஹஸ்பதி, யக்ஞவல்கியர் உள்ளிட்ட ரிஷிகள் பலர், அன்னை சரஸ்வதியை வழிபட்டே ஞான ஒளி பெற்றனர்.
அன்னை சரஸ்வதி தேவி அவதரித்த விதத்தை புராணங்கள் அழகாகத் தெரிவிக்கின்றன. படைப்புக் கடவுளான பிரம்மா, எல்லா உலகங்களையும் உயிரினங்களையும் படைத்தார். அதன் பின்னரும் அவருக்கு ஏதோ குறை இருப்பதாய்ப்பட்டது. திருப்தி ஏற்படவில்லை. படைப்புகளும் ஏதோ சூனிய நிலையில் அமைதியாக அசைவற்றே இருந்தன.
தன் படைப்புகளின் திறன் குறித்துச் சிந்தித்த பிரம்மா, யோக நிலையில் கையில் இருந்த கமண்டலத்தை எடுத்தார். அப்போது அதில் இருந்து சில துளி நீர் கீழே சிதறியது. பின் அவை ஒன்றாகி, ஒரு சக்தியாக உருவெடுத்தது. அந்தச் சக்தி, ஞான ஒளி பொருந்திய ஒரு தேவியாக உருவெடுத்தாள். கையில் சுவடிகள் தாங்கி, ஸ்படிக மாலை, வீணை முதலியன ஏந்தி, ஞானத்தின் திருவுருவாய் பிரம்மன் முன் இருந்த வீணையை மீட்டி இசைக்கத் தொடங்கினாள்.
அந்த இசையின் சக்தியில், அதைக் கேட்கக் கேட்க, பிரம்மனின் படைப்புகள் அனைத்தும் அசையத் தொடங்கின. அறிவு கூடப் பெற்றன. ஆறு சலசலத்து ஓடியது. கடல் பேரிரைச்சல் கொண்டு முழங்கியது. மனிதர்கள் வாய் திறந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட பிரம்ம தேவர் மிகவும் மகிழ்ந்தார். அந்த தேவியை வாகீஸ்வரி, வாக்வாதினி, வாக்தேவி, பகவதி என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்தார். இவ்வாறு அன்னை அவதரித்த தினமே வசந்த பஞ்சமி.
இந்த தினத்தில் சரஸ்வதி தேவியின் படத்துக்கு, அல்லது சிலைக்கு மஞ்சள் நிற மலர்களால் அலங்காரம் செய்து, மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து வழிபட வேண்டும். எங்கே பார்த்தாலும் மங்கலகரமான மஞ்சள் நிறம் அன்று நிறைந்திருக்கும்.
சரஸ்வதி தேவியின் பாடல்கள் பாடி, தோத்திரங்கள் சொல்லி ஆராதித்து, இனிப்புகளை நிவேதனம் செய்ய வேண்டும். குங்குமப்பூ, கல்கண்டு கலந்த வெல்லப் பொங்கல், பாயசம் ஆகிய நிவேதனங்கள் சிறப்பிடம் பெறுபவை.
இந்நன்னாளில் வித்யாரம்பம் மற்றும் கல்வி தொடர்பான அனைத்து காரியங்களையும் தொடங்கினால், தடையின்றி வெற்றி கிட்டும். இந்நாளை வட மாநிலங்களில் வெகுவாகக் கொண்டாடுகின்றனர். பட்டம் விடுவதும் இந்நாளில்தான். இந்நாளிலேயே பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சாந்தீபனி முனிவரிடம் குரு குலம் சேர்ந்து கலைகளைக் கற்றார் என்று பாகவதம் குறிப்பிடுகிறது.