பதிவு செய்த நாள்
08
ஆக
2017
03:08
விளக்கு எரியும்போது பார்த்தால், அந்த ஜோதியின் அடியில் மஞ்சளாகவும், நடுவில் கருப்பாகவும் மேலே சிவப்பாகவும் இருக்கும். மஞ்சள் பிரம்மாவின் நிறம், கருப்பு விஷ்ணுவின் நிறம், சிவப்பு சிவனுடையது.
ஆக, ஜோதி மும்மூர்த்திகளின் சொரூபம்! சிவ லிங்கமும் அப்படியே! சாதாரணமாக எல்லோரும் நினைப்பதுபோல அது சிவரூபம் மட்டுமல்ல; லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுபீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கம் இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் ஆங்காங்கே ஜுவாலாமுகி போல் இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ அல்லது வடலூரில் இருப்பது போலச் செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டு வந்திருக்கிறார்கள். இந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர்லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்; லிங்கம்தான் ஜோதி!
யாராவது உறவினரை நினைக்கிறோம். அப்போது சந்தோஷமாய் இருக்கிறது. அதேபோல், உருவம் இல்லாத சிவமும், ஒரு உருவத்துடன் வந்து அனுக்கிரகம் பண்ணினால்தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஞானிகளுக்கு மட்டும் பரமாத்மா சொரூபத்தின் உருவம் இல்லாத பண்பு புரியும். உருவத்தைப் பார்த்துப் பார்த்து ஆனந்தம் அனுபவிக்கிற நமக்கு, ஈசுவரனை உருவத்தோடு கண்டால்தான் ஆனந்தம் உண்டாகும். அதற்காகத்தான் அருவமான ஈசுவரன், அருவுருமான லிங்கத்துடன் நில்லாமல், அந்த லிங்கத்துக்குள்ளேயே திவ்ய சொரூபம் காட்டும் லிங்கோத்பவ மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார்.
இப்படி ரூபத்தைக் காட்டினாலும், வாஸ்தவத்தில் தமக்கு அடியும் இல்லை. முடியும் இல்லை என்றும் தாம் ஆதியோ அந்தமோ இல்லாத அனந்த வஸ்துவே என்றும் உணர்த்துவதற்குத்தான். மேலே லிங்க வட்டத்துக்குள் ஜடாமுடி முடியாமலும், கீழே தமது பாதம் அடங்காமலும் இருப்பதாகக் காட்டுகிறார்!
அப்படி அடி, முடி இல்லாமல் அவர் ஜோதி ஸ்வரூபமாக நின்றார். ஜ்யோதிர் லிங்கமாக ஆகாயத்துக்கும், பூமிக்குமாக, இப்படி பரமசிவன் உற்பவித்த இரவே சிவராத்திரி. சகல பிரபஞ்சமும் அடங்கி இருக்கிற லிங்க ரூபமானது ஆவர்பவித்த சிவராத்திரி மகா சதுர்தசி! இந்த இரவில் அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கி இருக்க வேண்டும். இதைவிட ஆனந்தம் நமக்கு வேறு இல்லை.