பதிவு செய்த நாள்
08
ஆக
2017
03:08
சிவன்கோயில்களில் தெற்கு கோஷ்டத்தில் அருளும் தட்சிணாமூர்த்தியை அநேகமாக எல்லோருக்குமே தெரிந்திருக்கும். அந்த தென்முக தெய்வத்தின் வடிவில் எட்டுவகையான பேதங்கள், அதாவது அமைப்புகள் உண்டு என்கின்றன புராணங்கள்.
1. தட்சிணாமூர்த்தி (இந்த அமைப்பே பெரும்பாலான கோயில்களில் இருக்கும்), இதைத்தவிர மற்ற ஏழுவகைத் திருவடிவங்கள்: யோக தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி, மேதா தட்சிணாமூர்த்தி, ஆசித தட்சிணாமூர்த்தி, ஸ்தித தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி சக்தி தட்சிணாமூர்த்தி (தேவியுடன் காட்சி தரும் இவரை தாம்பத்ய தட்சிணாமூர்த்தி என்றும் சொல்வார்கள். இந்த அமைப்பினை சுருட்டப்பள்ளியில் காணலாம்) ஆகியன.
இந்த எட்டு வடிவங்களிலும் முக்கியமானதும், அபூர்வமாகவே ஓரிரு தலங்களில் அமைந்திருப்பதும், இறைவனின் திருவுருவ அமைப்பில் மாற்றங்கள் உள்ளதும், புலனடக்கம் வேண்டிடும் சித்த புருஷர்களால் பெரிதும் போற்றப்படுவதுமான வடிவம், ஸ்தித தட்சிணாமூர்த்தி ரூபமாகும்.
பொதுவாக கல்லால மரத்தினடியில் வேத விளக்கமாக அமர்ந்து சனகாதியர்க்கு மவுன உபதேசம் செய்திடும் தென்முகப் பெருமான், தனது இடது திருவடியினை மடக்கி, வலது திருவடிகீழ் அபஸ்மாரம் எனும் முயலகனை மிதித்தவாறு வீற்றிருப்பார்.
ஸ்தித தட்சிணாமூர்த்தி இந்த அமைப்பில் இருந்து வேறுபட்டு, வீராசனத்தில் தனது வலக்காலினை மடித்து இடக்காலின் கீழ் முயலகனை இருத்தியவண்ணம் தரிசனம் அளிப்பார்.
பாம்பு, நெருப்பு, மான் போன்ற தனக்கான அடையாளங்கள் ஏதும் இல்லாதவராக பழுப்பு நிறமுடைய சடையோடு, ருத்திராட்ச மாலை, அமுத கலசம் ஏந்தி ஒரு கரத்தினால் சிவஞானபோதம் காட்டி, மறுகரத்தினை தொடையில் இருத்தி, ஆன்மா லயித்தலை உணர்த்திடும் நிலையில் காட்சியளிப்பார் இவர்.
அமுதகலசம் மனமாசுகளை நீக்கி சிவஞானத்தில் திளைக்கச் செய்வதையும், ருத்ராட்ச மாலை சிவஞானத்தில் நிலைத்து ஐந்தெழுத்தை எண்ணவேண்டும் என்பதையும், முயலகனை மிதித்தல் ஆணவமலத்தை மிதித்தலையும் உணர்த்திட மவுனமாக இருந்து தன் ரூப பாவங்களாலே வேதத்திற்கு விளக்கம் அளிப்பவராகத் திகழ்பவர் ஸ்தித தட்சிணாமூர்த்தி.
மேலும், யோக வழிபாட்டில், பிங்கலை சரம் (இது வலதுபக்கமாகச் செல்வது) பார்ப்பவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு கிட்டும் என்பது சித்தர்கள் காட்டும் முறை. இதனை உணர்த்தவே ஆதி முதல் சித்தராகிய சிவபெருமான் தமது வலது காலினை மடக்கி அமர்ந்திருப்பதாகவும் கூறுவர்.
குருவே உயிர்களின் அறியாமையாகிய இருளை நீக்குபவர் குரு என்ற சொல், கு+ர்+உ என்று பிரிந்து, கு என்பது சித்தியைக் கொடுப்பவர் என்பதையும் ரகாரம் (ர்) பாவங்களைச் சுட்டெரிக்கும் அக்னியையும் குறிக்கும். இந்த இரண்டினையும் அருள்பவர் சிவபெருமான் என்பதை உ- காரம் உணர்த்துகிறது என்று புராணங்கள் கூறுகின்றன.
இருளை நீக்கும் ஆற்றல் உள்ளவரையே குருவாகப் பெற்றிடவேண்டும். இல்லையென்றால் என்ன ஆகும் என்பதற்கு விளக்கமாக திருமூலர் தமது திருமந்திரத்தில்...
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி வீழுமாறே
என்று தெளிவுபடுத்துகிறார்.
ஐம்புலன்களுக்கு அடிமையாகி உயிர்கள் மாய வலையில் சிக்கி இறைவனை அறியாது துன்புறுகையில் இறைவனே அருட்குருவாக வந்து மாய இருளை நீக்கி அருள்வான். மாயை நீங்கிய உயிர்கள் தூய்மையான ஜோதி வடிவாக இறைவன் திருவடியில் சேரும் அவற்றைத் தன் திருவடி நிழலில் இணைத்துக் கொள்கையில் ஈசன் கொள்ளும் வடிவமே ஸ்தித தட்சிணாமூர்த்தி வடிவம். ஸ்திதம் என்பதை ஸ்திரம் என்றும் சொல்வதுண்டு. ஸ்திரமானது என்பதன் பொருள், அனைத்துக்குப் பின்னரும் அழிவின்றி இருப்பது என்பதுதான்.
அந்த அபூர்வமான ஸ்தித தட்சிணாமூர்த்தி வடிவினை திருப்பெரும்புதூரிலிருந்து வல்லக்கோட்டைக்குச் செல்லும் வழியில் வல்லக்கோட்டையிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள எரையூர் இன்பாம்பிகை உடனுறை இருள் நீக்கிஸ்வரர் கோயிலில், கருவறை கோஷ்டத்தில் தரிசிக்கலாம்.