பதிவு செய்த நாள்
08
ஆக
2017
03:08
பகவானின் எந்த அவதாரங்களிலும் விளையாட்டுகளையோ, சேஷ்டிதங்களையோ நாம் கேட்டிருக்கோமா? இல்லை. ஆனால், கண்ணன் அவதாரத்தில் நிறைய சேஷ்டிதங்களைப் பார்க்கிறோம். அவனுடைய ஒவ்வொரு சேஷ்டிதத்துக்குக் கூட ஒவ்வொரு பிரசாதம் பண்ணுகிறோம்.
என்னுடைய விளையாட்டுகளில் இருக்கும் உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்ந்தால், உனக்கு அதுவே கடைசி பிறப்பாக இருக்கும் என கண்ணனே கூறுகிறார். நமது விளையாட்டுக்கெல்லாம் ஓர் எல்லை உண்டு. ஆனால், பகவானின் விளையாட்டுக்கு எந்த எல்லையும் கிடையாது.
கண்ணனுக்கு ரஜோ குணமோ, தமோ குணமோ கிடையாது. அவனிடம் இருப்பது மேலான சத்வகுணம் மட்டும்தான். அவனுடைய விளையாட்டுகளை மேலோட்டமாகப் பார்க்காமல், ஆழ்ந்து நினைத்து, அவனைத் தியானிக்க தியானிக்க நமக்கு மறுபிறவியே கிடையாது. சம்சாரம் என்பது நோய். அதற்கு வைத்தியம் என்பது இனிப்பாகவா இருக்கும்?அதற்காகத் தன் விளையாட்டுகளையே மருந்தாகக் கொடுத்தார் கண்ணன்.
தன் அவதாரத்தை சத்தியம் என்பதை நிரூபிக்கவும், நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவும் கண்ணன் அவதரித்தார். தப்பு பண்ணினால்தான் பொறுமை காட்ட முடியும். இருட்டில்தானே வெளிச்சத்தின் தன்மை தெரியும். இதுபோல வைகுண்டத்தில் இல்லையே பூமியில் கண்ணன் அவதரித்ததற்கு இதுவும் மற்றொரு காரணம். பல்வேறு இடங்களுக்குச் சென்று, தன் திருவடிகளைப் பதித்தால்தானே அவையெல்லாம் புண்ணிய க்ஷேத்ரங்களாக மாறும் பாரதத்தில் நதி, காடு, மலை எல்லாவற்றிலும் புண்ணியத் தன்மை உள்ளது. இதுவும் கண்ணன் அவதார காரணத்தில் ஒன்று.
பிருந்தாவனம் என்பதே பெரிய காடு. இதில் 12 வனங்கள் உள்ளன. மனிதர்களிடம் கண்ணன் பழகியதை விட, மரம், செடி, கொடிகளுடன் பழகியது அதிகம். காடுகள் மேல் கண்ணனுக்கு ஆசை அதிகம். காடு வாழ்ந்தால்தான் நாடு வாழும் என்பதை நமக்கு வாழ்ந்து காட்டினார். நைமிசாரண்யத்தில் பகவான் காடு வடிவமாகவே இருக்கிறாராம். மாடு, கன்றுகள், செடி, கொடி, மரங்களை ரக்ஷித்து, அதன் நடுவே வாழ்ந்து பழக வேண்டும் என்பதை நமக்கு உணர்த்திக் காட்டியவன் கண்ணன்.
எல்லோரிடமும் தோழமை கொண்டவன் கண்ணன். தானும் மனிதர்களில் ஒருவன் என்பதை எடுத்துக்காட்டப் பிறந்தவன் கண்ணன். வெண்ணெயைச் சாப்பிட்டு விட்டு, பானையை உடைத்து விடுவாராம். அதாவது, நமது ஆத்மாவை எடுத்துக் கொண்டு, சரீரமான பானையை உடைத்து விடுகிறார். இதற்கு பக்தி மிகவும் அவசியம். மிகவும் எளியவன் கண்ணன். நமது பக்திக்குக் கட்டுப்பட்டவன். அதிலும் இளகிய மனதுடையவர் களைத்தான் கண்ணனுக்குப் பிடிக்கும்.