பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நேற்று கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.முன்னதாக ஆடி விழாவில் பெருமாள் பல்வேறு அவதாரங்களில் வாகனங்களில் வீதிவலம் வந்தார். நேற்று முன்தினம் தேரோட்டமும் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு டிரஸ்டிகள், பொதுமக்கள் புடைசூழ கோயில் மண்டத்தில் உள்ள தீர்த்தகுளத்தில், தீர்த்தமூர்த்தியுடன் அர்ச்கர் சத்யா நீராடினார். தொடர்ந்து சுவாமிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், உற்சவர் சுந்தரராஜப் பெருமாள் ஆடி பிரம்மோற்ஸவத்தின் நிறைவாக காலை ஏகாந்த சேவையில் அருள்பாலித்தார். பின்னர் ரதவீதிகளில் பெருமாள் வெண்கொற்றை குடையுடன், சங்கு, சேகண்டி இசையுடன், மேள, தாளங்கள், பஜனை, வேதபாராயணம் முழங்க வீதிவலம் வந்தார். இரவு 8:00 மணிக்கு மேல் கருடாழ்வார் சன்னதியில் மந்திரங்கள் முழங்க அபிேஷகமும், இரவு 11:00 மணிக்கு மேல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.