பதிவு செய்த நாள்
09
ஆக
2017
01:08
தலைவாசல்: தலைவாசல் அருகே, பழமை வாய்ந்த கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதால், பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். தலைவாசல் சுற்றுவட்டாரங்களில் பழமையான கோவில்கள் அதிகளவில் உள்ளன. ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயம், சித்தேரி சிதம்பரேஸ்வரர் ஆலயம், நாவக்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்டவை, 500 ஆண்டுகள் கடந்து, இன்றும் நிலைத்து நிற்கின்றன. தமிழகத்திலேயே அஷ்ட பைரவர்கள் உள்ள ஒரே கோவிலாக, ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இக்கோவிலில் உள்ள பழமையான கல்மண்டபம் பராமரிப்பின்றி உள்ளது. மண்டபத்தின் சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளதுடன், பழைய பொருட்கள் வைக்கும் குடோனாக மாறியுள்ளது. ஆறகழூர் சோழீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் மாடு, ஆடுகள் கட்டி வைக்கும் தொழுவமாக மாறியுள்ளது. காமநாதீஸ்வரர் ஆலயத்தின் ஆதி கோவிலான, இக்கோவில் முக்கியத்துவம் குறைந்து பகுதிவாசிகளே வராத நிலையில் உள்ளது. சித்தேரியில் உள்ள சிதம்பரேஸ்வரர் ஆலயமும் மிகவும் சிதிலமடைந்து, மாட்டு தொழுவமாக காட்சியளிக்கிறது. கோவிலின் பின்புறம் உள்ள முருகன், வள்ளி, தெய்வானை சன்னதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குடிமகன்களின் கூடாரமாகியுள்ளது. மது பாட்டில்கள் வளாகத்தின் உள்ளேயே உடைந்து கிடப்பதால், கோவிலின் உள்ளே வெறும் காலால் செல்ல முடியாத நிலை உள்ளது. நாவக்குறிச்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், பராமரிப்பின்றி உள்ளது. இந்த கோவிலில் சில வாரங்களுக்கு முன், பல கோடி மதிப்புள்ள, ஒன்பது ஐம்பொன் சிலைகள், சுரங்க அறையில் இருந்து எடுக்கப்பட்டது. கோவில் சொத்துகள் ஏராளமாக இருந்தும், சில தனிநபர்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். இதை, அறநிலையத்துறை அதிகாரிகள், கண்டும் காணாமல் இருக்கின்றனர்.