பதிவு செய்த நாள்
09
ஆக
2017
01:08
சேலம்: செவ்வை மாரியம்மனுக்கு, பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. சேலம், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், ஆடிப்பண்டிகை திருவிழா கடந்த, 17ல், முகூர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. 25ல், பூச்சாட்டுதல், 27ல், கம்பம் நடுதல், 31ல், கொடியேற்றப்பட்டது. வரும், 28 வரை நடக்கும் விழாவின், முத்தாய்ப்பாக அலகு குத்துதல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. அம்மனுக்கு, அபி?ஷக, ஆராதனைகள் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, பக்தர்கள் வழிபட்டனர். மேலும், குழந்தை பாக்கியம் பெறவும், திருமண தடை நீங்கி, குடும்பத்தில், சகல ஐஸ்வர்யங்கள் ஒரு சேர பெற, நேர்த்திக்கடன் நிறைவேற்ற, அலகுகுத்தி வழிப்பட்டனர். முகம் மற்றும் முதுகின் பின்புறத்தில், கூர்மையான கத்தியை குத்திக் கொண்டும், நீளமான சூலத்தை வாயில் அலகு குத்தியும், பட்டா கத்தி அலகு, விமான அலகு என, பல்வேறு விதமான அலகுகளை உடலில் ஆங்காங்கே குத்தி, உடலை வருத்தி, தொங்கியபடி, செவ்வாய்ப்பேட்டை முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். மேள, தாளம் முழங்க, தாரை, தப்பட்டை ஒலிக்க, அலகு குத்தி வந்த ஊர்வலத்தை கண்டு, பக்தர்கள் பரவசமடைந்தனர். அம்மன், குமாரி கவுரி கணபதி அலங்காரத்தில், புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.