பதிவு செய்த நாள்
11
ஆக
2017
12:08
சமணர்களின் அடையாளமாக தற்போதும் திகழும், திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியநாதர் சமண சுவாமி கோவிலில் பழமையான அடையாளங்கள் மாற்றப்பட்டிருப்பதாக, காஞ்சி சமண தமிழ் இலக்கிய மன்ற செயலர், நீலகேசி கவலை தெரிவித்தார். தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் நகரம், சிவ, விஷ்ணு, சமண வழிபாடுகளை கொண்டிருந்தது. இன்றும் வழிபாடுகள், அந்த கோவில்களில் விசேஷமாக நடைபெற்று வருகின்றன.
புனரமைப்பு: சிவ, விஷ்ணு கோவில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமுள்ள நிலையில், சமண மத கோவில்கள் கொஞ்ச மாகவே உள்ளன. ஜீன காஞ்சி என்றழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக அமைந்துள்ள இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. சமணர்கள் பலர் தற்போதும், இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன் இக்கோவிலில் நடைபெற்ற புனரமைப்பு பணியில், கோவிலின் வடிவமைப்பு மாறிவிட்டதாக, காஞ்சி சமண தமிழ் இலக்கிய மன்ற செயலர், ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியை நீலகேசி புகார் தெரிவித்து உள்ளார்.
நீலகேசி கூறியதாவது: கோவில் மேற்கூரை பலவீனமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில் கோவில் விமானத்திற்கு இடிதாங்கி கூட வைக்கப்படவில்லை. தொல்லியல் துறை இக்கோவிலை கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசின் நிதியில், ஐந்தாண்டுகளுக்கு முன் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டது. அதில், பல குளறுபடிகள் நடந்து விட்டன. பழமையான நடைமுறைகள், அமைப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.
அருங்காட்சியகம்: மூலவரிடம் உள்ள சிங்க சின்னம் இடம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், கோவில் கட்டிய போது, கிணறு வெட்டிய, செங்கதிர் செல்வன் என்பவரின் கல்வெட்டுகள் சிமென்ட் பூசி அழிக்கப்பட்டு உள்ளன. மஹாராஷ்டிராவில் உள்ள, அஜந்தா, எல்லோரா போன்று பழமைவாய்ந்த ஓவியங்கள் மேற்கூரையில் இடம்பெற்றுள்ளன. புனரமைப்பிற்கு பின், மழைநீர் ஒழுகி, ஓவியங்கள் பாழாகி வருகின்றன. இக்கோவிலின் ஸ்தல விருட்சமான குராமரம், முறையான பராமரிப்பில் இல்லை. கோவிலின் வளாகத்தில் ஒரு இடத்தில், பூச்செடிகள் வைப்பதை விட, பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை வைத்து, அருங்காட்சியகம் போல் மாற்றலாம். மேற்கண்ட பல பிரச்னைகள், இக்கோவில்களில் தற்போதும் உள்ளதாகவும், தொல்லியல் துறைக்கு பல முறை கடிதம் மூலம் புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். - நமது நிருபர் -