நபிகள் நாயகமும், தோழர்களும் ஒரு ஊருக்கு புறப்பட்டனர். வழியில் கூடாரம் அமைத்து தங்கினர். அன்று இரவு உணவுக்கு ஒரு ஆட்டை அறுத்து சமைக்கலாம் என்று நபிகளார் நண்பர்களிடம் கூறினார். நண்பர்கள் எல்லாரும் ஒப்புக்கொண்டனர். ஆளுக்கு ஒரு வேலையாக செய்வதென முடிவு செய்து, வேலையைப் பகிர்ந்து கொண்டனர். நபிகளுக்கு மட்டும் எந்த வேலையும் கொடுக்கவில்லை. உடனே நபிகள் அவர்களை அழைத்து, நீங்கள் மட்டும் வேலையைப் பகிர்ந்து கொண்டீர்களே! எனக்கும் வேலை வேண்டாமா! நான் காட்டுக்கு சென்று, அடுப்பு எரிக்க விறகு சேகரித்து வருகிறேன் என்றார்.
நண்பர்களோ நீங்கள் ஓய்வெடுங்கள். நாங்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். நபிகள் அவர்களிடம் “தோழர்களே! நீங்களே எல்லா வேலைகளையும் செய்து விடுவீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் அதை நான் விரும்பவில்லை. தோழர்களுக்கு இடையே உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. தோழர்களை விட தன்னை உயர்வாக நினைப்பவனை இறைவன் நேசிப்பதில்லை. என்னை உயர்வாக கருதி தனிமைப்படுத்துவதை அவன் கவனித்துகொண்டு தான் இருக்கிறான் என்றார். பின் விறகு சேகரிக்க புறப்பட்டார்.