தென்காசி கோயில் அம்மன் சன்னதி வாயில் கதவை திறக்க வேண்டும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28நவ 2011 12:11
தென்காசி : "தென்காசி காசிவிசுவநாதர் கோயில் அம்மன் சன்னதி நுழைவுவாயிலை கதவை திறக்க வேண்டும் என பா.ஜ., கவுன்சிலர்கள் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளனர். தென்காசி நகராட்சி அலுவலக புதிய கட்டட திறப்பு விழாவிற்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் செல்வராஜை தென்காசி பா.ஜ., கவுன்சிலர்கள் கருப்பசாமி, சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக தென்காசி காசிவிசுவநாதர் கோயில் திகழ்கிறது. இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோயில் ஆகம விதிப்படி அம்மன் சன்னதி நுழைவுவாயில் கதவை அடைத்து வைக்க கூடாது. ஆலயத்திலிருந்து அந்தந்த நுழைவுவாயில் வழியாக உற்சவர்கள் காட்சி கொடுப்பது ஆகம விதிப்படி நடைமுறையில் இருந்து வருகிறது. அம்மன் சன்னதி நுழைவுவாயில் கதவை அடைத்து வைத்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆழ்ந்த மனவேதனையடைந்துள்ளனர். எனவே அம்மன் சன்னதி கதவை திறந்து வழிபாடு செய்ய அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.