ராமாயணத்தில் மட்டுமல்ல, கிருஷ்ண அவதாரக் கதையிலும் கூனி ஒருத்தி உண்டு. திருவத்திரை என்ற பெயர் கொண்ட இந்த மூதாட்டி மிகவும் நல்லவள்; கிருஷ்ணரின் மீது தீராத அன்பு கொண்டவள். கிருஷ்ணரும் பலராமரும் கம்சனைச் சந்திக்க மதுராவுக்கு வந்தபோது, அவர்களை வரவேற்று அன்பாக உபசரித்தவள் இவள். இவளின் வாஞ்சையான உபசரிப்பால் நெகிழ்ந்து போன கிருஷ்ணர், இவளது கூன் முதுகைச் சரியாக்கி அழகிய பெண்ணாக மாற்றினார். வஞ்சனையான குணத்துக்கு ராமாயணக் கூனி என்றால், வாஞ்சையான அன்புக்கு கிருஷ்ணாவதாரக் கூனி என்றே சொல்லலாம்.