பதிவு செய்த நாள்
14
ஆக
2017
04:08
ஒரு துளி துளசி தீர்த்தம் போதும் கிருஷ்ணனை மகிழ்விக்க. அவனருளைப் பெற வேறு எவ்வித சிரத்தையும் தேவையில்லையாம் எளியவருக்கு. துளசி தீர்த்தமும் இல்லையா? கவலை வேண்டாம். மெய்யன்போடு அவனைத் தரிசித்தாலே போதும், அவனருளோடு அனைத்தும் வசமாகும். கிஷ்ணனின் திருமுடியைப் பிரியாதது மயிலிறகு. கருடனின் இறகிலிருந்து தோன்றியது மயில். தன் வாகனமான கருடனுடன் தொடர்பு உடையது என்பதால், மயிலிறகை தன் திருமுடியில் தரித்துள்ளாராம் கிருஷ்ணன், மகாலட்சுமி விரும்பி உறையும் பொருள்களில் மயிலிறகும் ஒன்று என்பதால் அது கண்ணனின் திருமுடியில் நிரந்தரமாக இடம்பெற்றது என்றும் கூறுவார்கள்.
கிருஷ்ணா என்ற பெயரில் கிருஷ் என்பதற்கு அனைவரையும் வசீகரிப்பவன் என்று பொருள் ணா என்பதற்கு பக்தி பரவசத்தை அளிப்பவன் என்று பொருள், அனைவரையும் வசீகரித்து பக்தி பரவசத்தை ஏற்படுத்துபவரே கிருஷ்ணர். ஒருமுறை, கோகுலத்தில் வெண்ணெய்த் திருடும் கண்ணனைக் கையும் களவுமாகப் பிடிக்க உறியில் மணியைக் கட்டி வைத்தனர் கோபியர். வழக்கம்போல் ஒரு கோபிகையின் வீட்டுக்கு வந்த கண்ணன், உறியில் மணி கட்டப்பட்டு இருப்பதைப் பார்த்தான். கோபியர்களின் தந்திரம் அவனுக்குப் புரிந்துவிட்டது.
எனவே, தான் மேலே ஏறி வெண்ணெய் எடுத்துத் தின்னும்வரை மணி ஒலிக்கக் கூடாது என்று மணியிடம் வேண்டுகோள் வைத்தான். பகவானே கேட்கிறான் என்பதால் மணியும் ஒப்புக் கொண்டது. கண்ணனும் மேலே ஏறி உறியில் இருந்த வெண்ணெயை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான். அதுவரை ஒலி எழுப்பாத மணி, கண்ணன் கீழே அமர்ந்து வெண்ணெயை உண்ணப்போகும் தருணத்தில் வேகமாக ஒலியெழுப்பியது. உடனே கோபிகை ஓடிவந்து கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டாள். ஒலி எழுப்பி, தன்னை காட்டிக் கொடுத்துவிட்ட மணியைக் பரிதாபமாகப் பார்த்தான் கண்ணன். மணி சொன்னது; பகவானே, தாங்கள் மேலே ஏறி வெண்ணெய் எடுத்துக் கொண்டு கீழே இறங்கும் வரை நான் ஒலிக்கவில்லையே. தாங்கள் வெண்ணெயை உண்ணும் போதுதானே ஒலித்தேன். பகவான் நைவேத்தியம் உண்ணும்போது ஒலிப்பது என்னுடைய கடமை அல்லவா? அதனால்தான் ஒலி எழுப்பினேன்.
தயிர் வெண்ணெய் ஆகியவற்றை கண்ணன் திருடிச் செல்லும்போது, அவனது பிஞ்சுப் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் வெண்ணெயும் தயிரும் பாதச்சுவடுகளாக தரையில் பதியுமாம். இந்தச் சுவடுகளே, அவன் ஒளிந்திருக்கும் இடத்தையும் கோபியருக்குக் காட்டிக் கொடுத்து விடுமாம். கண்ணனின் இந்த விளையாடலை நினைவுபடுத்தும் விதமாகவும், அவன் நம் வீட்டுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்துடனும் தான்... கோகுலாஷ்டமி தினத்தில் கண்ணன் பாதம் பதிக்கிறோம்!
கிருஷ்ண பக்தரான நாராயண தீர்த்தர் ஒருமுறை கடுமையான வயிற்று வலியோடு தல யாத்திரை மேற்கொண்டிருந்தார். அவர், வரகூரை அடைந்து, அங்கிருந்த வேங்கடேச பெருமாளை வழிபட்டதுமே அவருடைய வயிற்றுவலி மாயமானதாம்! இறைவனின் கருணையைப் போற்றி அவர் இயற்றிய இசைக் காவியம்தான் கிருஷ்ணலீலா தரங்கிணி, இந்தக் காவியத்துக்கு கோயிலில் இருந்த ஆஞ்சநேயர் தாளம் போட்டதாகவும், திரைக்குப் பின்னால் பெருமாள் நடனம் ஆடியதாகவும் சொல்லப்படுகிறது. இங்குதான் முதன்முதலாக உறியடி உற்சவத்தை நாராயண தீர்த்தர் தொடங்கி வைத்ததாகவும் சொல்வர்கள்.
வஸூதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம்
தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
கருத்து: வசுதேவருக்கு மகனாக அவதரித்தவரும், கம்சன், சாணூரன் போன்றவர்களை அழித்தவனும், தேவகிக்குப் பரமானந்தத்தை அருள்பவனும், உலகத்துக்கே குருவாகக் திகழ்பவருமான கிருஷ்ணரை நான் வணங்குகிறேன.
ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய கிருஷ்ணாஷ்டகத்தின் இந்த முதல் ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், மனதில் எப்போதும் சாந்தமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும்.