பதிவு செய்த நாள்
18
ஆக
2017
12:08
கிருஷ்ணராயபுரம்: மேட்டுத்திருக்காம்புலியூர் கட்டளை வாய்க்கால் அருகே, பூமிக்குள் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகள் குறித்து, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, திருக்காம்புலியூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டுத்திருக்காம்புலியூர் அருகே, கட்டளை வாய்க்கால் கரையோரம், பழைமையான சிவலிங்கம், நந்தி சிலை ஆகியவை, சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டன. இதையடுத்து, சிலைகள் கிடைத்த பகுதியில், தோண்டியபோது, கோவில் சுற்றுச் சுவர் போன்ற அமைப்பில் கற்கள் தெரிந்தன. வருவாய்துறை அதிகாரிகள் பார்வையிட்டு, கரூர் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கரூர் தொல்லியல் துறை காப்பாளர் நந்தகுமார், வருவாய்த் துறையினர், வி.ஏ.ஓ.,க்கள் கார்த்திகேயன், விஜய் ஆனந்த் ஆகியோர் அப்பகுதியில் நேற்று மதியம் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து காப்பாளர் நந்தக்குமார் கூறியதாவது: லிங்கம், நந்தி சிலைகளையும், பூமிக்கு அடியில், 30 ஆடி ஆழத்தில் உள்ள சுற்றுச் சுவர் கற்களையும் பார்த்தோம். இந்த இடத்தின் தன்மை குறித்தும், கோவில் இருந்தற்கான சான்றுகள் மற்றும் சுவாமி சிலைகள் குறித்தும், சென்னையில் உள்ள தமிழ்நாடு தொல்லியல் துறை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளுக்கு தெரிவித்து, அவர்களின் ஆலோசனைப்படி, ஆய்வு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.