ஒரு பக்கம் கடவுள் என்னும் அருட்சக்திக்காவும், மறுபக்கம் பொய் என்னும் பகைச் சக்திக்காகவும் வாழ்வு நடத்தாதீர்கள். நேர்மை, உண்மைக்காகவும் மட்டும் உங்கள் மனக்கதவு திறந்திருக்கட்டும். நாம் கடவுளை நோக்கி ஒரு அடி வைத்தால், அவர் நம்மை நோக்கி நூறு அடி வந்து விடுவார். நாம் அனைவரும் அவரது கையில் உள்ள தேர்ந்த கருவியாக இருக்க முயற்சிக்க வேண்டும். இடையூறு என்பது நம்மை சுற்றியுள்ள சூழலில் இருந்து உண்டாவதாக கருதுவது தவறு. உண்மையில் இடையூறு நமக்குள் இருந்தே உருவாகிறது. எதை கொடுத்தாலும், யாருக்கு கொடுத்தாலும் அதை கடவுளுக்கே கொடுக்கிறோம் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால் எதிரி என்ற சொல்லுக்கு இடமிருக்காது. கடவுளின் கண்களுக்கு அற்பமானது என்று உலகில் ஏதுமில்லை. அது போல உங்களின் கண்களுக்கும் அற்பமானது என்று எதுவும் இருக்க வேண்டாம். உத்தம செயல்களில் ஈடுபட நினைத்தால், அதை உடனடியாகச் செய்வதே சிறந்தது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் அதை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விடலாம். சோர்வு, உங்களை சோர்வடைய செய்ய அனுமதிக்காதீர்கள். அதிலிருந்து விலகி நின்று அதற்கான காரணத்தை அறிய முற்படுங்கள். எப்பாடுபட்டாவது சோம்பலில் இருந்து உங்களை காத்துக் கொள்ளுங்கள்.