பதிவு செய்த நாள்
23
ஆக
2017 
11:08
 
 திருச்சி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்சியில், 3,000 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. வரும், 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருச்சி கலெக்டர் ராசாமணி தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. சதுர்த்தி விழாவுக்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்பவர்கள், ஊர்வலம் நடத்துபவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி, போலீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதேபோல், பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் இடங்கள் மற்றும் ஊர்வலம் பற்றி, தனியே ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட பின், மாநில செயலர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:இந்து முன்னணி சார்பில், மாநிலம் முழுவதும், 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. திருச்சியில், 500 இடங்களில் சிலைகள் வைக்கப்படும். தொடர்ந்து, மூன்று நாள் வழிபாட்டுக்கு பின், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு, திருச்சியில், பல்வேறு அமைப்புகள் சார்பில், 3,000க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன.