பதிவு செய்த நாள்
26
ஆக
2017
11:08
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 230 இடங்களில் சிலை வைத்து, சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, பா.ஜ., இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், மாவட்டம் முழுவதும் நேற்று விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். விநாயகருக்கு வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ராமநாதபுரம் சாயக்கார தெருவில் 10 அடி உயர விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. இதே போல், நகர் முழுவதும் 34 இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. இந்த சிலைகள் அனைத்தும் ஆக.,27ல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.
இதே போல், ராமேஸ்வரத்தில் இந்து முன்னணி பா.ஜ., சார்பில் 47 இடங்களிலும், இந்து மக்கள் கட்சி சார்பில் 10 இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள், நாளை(ஆக.,26) ஊர்வலமாக சென்று கரைக்கப்படுகின்றன. இந்து மக்கள் கட்சி வைத்துள்ள 10 சிலைகள் ஆக.,27ல் கரைக்கப்படுகின்றன. இதேபோல், பரமக்குடியில் 46 இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் ஆக.,27ல் கரைக்கப்படுகின்றன. மேலும், மண்டபம் பகுதியில் 13 சிலைகள், தேவிப்பட்டினத்தில் 10 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.இதுதவிர, முதுகுளத்துார், கமுதி, கடலாடி, சாயல்குடி உள்பட மாவட்டம் முழுவதும் 230 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. சிலைகளுக்கு ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.சிலைகளை மாவட்ட நிர்வாகம், ஏற்கனவே அறிவித்த இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகுளத்துார்: முதுகுளத்துார் காந்திசிலை அருகேயுள்ள சித்திவிநாயகர், ஆஞ்சநேயர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு யாக கால பூஜைகளுடன், சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டது. அலங்கரிக்கபட்ட தேரில், சிறப்பு அலங்காரத்துடன் விநாயகர் வீதி உலா வந்தார்.
வடக்கூர் வழிவிடு முருகன் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கங்கை நீரால் அபிேஷகம் செய்யபட்டு, சிறப்பு பிரார்த்தனைகள், அபிேஷகம் செய்யபட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.
முதுகுளத்துார் ஸ்டேட் வங்கி கிளை அருகேயுள்ள செல்வ விநாயகர் கோயில் சிறப்பு பூஜைகள், பிரார்த்தனைகள் செய்யபட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் சிறப்பு பூஜைகள், அபிேஷகம், தீபாராதனை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கபட்டது. நிகழ்ச்சியில் ஆணையாளர்கள் ராதாகிருஷ்ணன், சாவித்ரி (கிராம ஊராட்சிகள்) உட்பட பலர் பங்கேற்றனர்.