பதிவு செய்த நாள்
30
நவ
2011
12:11
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, வரும் டிச., 9ல் நடக்கிறது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன் அறிக்கை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அடுத்த மாதம் 8ம் தேதி மாலை 6.30 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது; 9ம் தேதி மாலை 6.30 மணிக்கு திருக்கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது. அன்றைய தினம் சுவாமி வீதியுலா காட்சியும் நடக்கும். வரும் 10ம் தேதி ரோஹிணி நட்சத்திரத்தில், சந்திர கிரஹணம் மாலை 6.15 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.48 மணிக்கு மிருகசிரீஷ நட்சத்திரத்தில் நிறைவடைகிறது. கிரஹணத்தை முன்னிட்டு வழக்கம்போல், கால பூஜைகள் நடந்து பகல் 1.00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாயரட்ஷை, அர்த்தஜாம பூஜைகள் செய்விக்கப்பட்டு, மாலை 4.15 மணிக்கு மீண்டும் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் கோவில் திறக்கப்பட மாட்டாது. மறுநாள், 11ம் தேதி அதிகாலை 5.00 மணிக்கு கிரஹண புண்யாக வாசனை பூஜைகள் செய்விக்கப்பட்டு, தொடர்ந்து உஷத்கால பூஜை நடக்கும். பின்னர், வழக்கம்போல் பூஜைகள் நடக்கும். கிருத்திகை, ரோஹிணி, திருவாதிரை, மிருகசீரிஷம், ஹஸ்தம், திருவோணம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கோவிலில் கிரஹண சாந்தி செய்து கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.