பதிவு செய்த நாள்
01
செப்
2017
01:09
அறநிலையத்துறை கோவில்களில், ஆறு ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்காமல், அதிகாரிகளை தக்கராக நியமித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடுகளுக்கு வழி வகுப்பதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள அறநிலையத்துறை கமிஷனர், சிக்கலுக்கு முடிவு கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அறநிலையத்துறையின், 1959ம் ஆண்டு சட்டப்படி, கோவில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்குத் தான் அதிகாரங்கள் உள்ளன. செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவின் கீழ், பணியாற்ற வேண்டும். தமிழகத்தில், ஆண்டு வருவாய், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களுக்கான அறங்காவலர்களை மாநில அரசு நியமிக்கும். அதற்கு குறைவாக வருவாய் உள்ள கோவில்களுக்கு, அறநிலையத்துறை கமிஷனரும், இரண்டு லட்சம் ரூபாய் வரை உள்ள கோவில்களுக்கு இணைக் கமிஷனரும் அறங்காவலர் குழுவை நியமிக்கலாம். இந்த குழுவின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள். ஆனால், ஆறு ஆண்டுகளாக அரசும், அறநிலையத்துறையும், அறங்காவலர்களை நியமிக்காமல் உள்ளது. இது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதால், அறநிலையத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் ஜெயா, அறங்காவலர் நியமத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, ஆன்மிக நல விரும்பிகள் சிலர் கூறியதாவது: இடைக்கால ஏற்பாடு என, அறநிலையத்துறையை சேர்ந்தவர்களே, தக்கராக நியமிக்கப்படுகின்றனர். ஒரே அதிகாரி, 30க்கும் மேற்பட்ட கோவில்களில், தக்கராக இருந்து வருகிறார். அறநிலையத்துறை சட்டப்படி, இடைக்கால ஏற்பாடு என்பது, மூன்று மாதங்கள் மட்டுமே. ஆனால், ஆறு ஆண்டுகளாக இந்த இடைக்கால ஏற்பாடு தொடர்கிறது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திலும், கோவில் நிர்வாக அதிகாரம், அறங்காவலர்களிடம் தான் உள்ளது என, தவறான தகவல்களை அரசு கூறி வருகிறது. பக்தி நேயத்தோடு பார்க்க வேண்டிய கோவில்களை, பணம் காய்க்கும் இயந்திரமாக, அதிகாரிகள் கருதுகின்றனர்.முழு அதிகாரத்தையும், தங்கள் கையில் வைத்துக் கொள்ளவே, அறங்காவலர்களை நியமிக்காமல் உள்ளனர். அறநிலையத்துறை புதிய கமிஷனரும், தமிழக அரசும், உடனடியாக அறங்காவலர் நியமனம் செய்ய உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -