பதிவு செய்த நாள்
01
செப்
2017
01:09
கோவை : சிங்காநல்லுார் உப்பிலிபாளையம் காந்தி நகரில், 150 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீ பட்டத்தரசியம்மன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மதுரைவீரன் கோவிலின் அஷ்டபந்தன, மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேக விழா, நேற்று முன் தினம் மாலை, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, காப்புகட்டுதல், கும்பஅலங்காரம் ஆகியவற்றுடன் துவங்கியது. இரவு, 9:00 மணிக்கு, முதற்கால யாகவேள்வியும், மகாபூர்ணாகுதியும், கோபுரகலச பிரதிஷ்டையும் நடந்தன. இரவு 10:00 மணிக்கு, அனைத்து மூர்த்திகளுக்கும், யந்திர ஸ்தாபனம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தன. நேற்று காலை, 5:30 மணிக்கு, 2ம் கால யாக பூஜையும், கும்ப மற்றும் வேதிகா பூஜைகளும் நடந்தன. காலை 8:00 மணிக்கு, கும்ப கலசங்கள், கோவிலை சுற்றி வந்து, சரியாக, 8:30 மணிக்கு, வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியர்கள், கோபுர கலசங்களுக்கும், மூர்த்திகளுக்கும், தீர்த்தக்குடங்களிலிருந்து புனித தீர்த்தத்தை ஊற்றினர். கூடியிருந்த பக்தர்கள் மீதும், புனித நீர் தெளிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.