பதிவு செய்த நாள்
01
செப்
2017
02:09
பெசன்ட் நகர், வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, போதிய அடிப்படை வசதிகளை, ஆலய நிர்வாகம் செய்து தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
45வது பெருவிழா: சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ள, அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தின், 45வது ஆண்டு பெருவிழா நேற்று முன்தினம், கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், தினமும் திருப்பலிகள் நிகழ்த்தப்படும்.இதில், பங்கேற்பதற்காக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். குறிப்பாக, தேர் திருவிழாவின் போது, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். பக்தர்கள் பாதுகாப்பிற்காக காவல் துறை, தீயணைப்பு துறை, சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை சார்பில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பக்தர்கள் வருகைக்கு ஏற்ற வகையில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக காணப்படுகிறது.
பெரும் அவதி: இது குறித்து பக்தர்கள் தரப்பில் கூறியதாவது:பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா ஆலய பெருவிழாவிற்கு, பக்தர்களின் வருகை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அவர்களின் பாதுகாப்பு, பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளின் ஆலய நிர்வாகம் கவனம் செலுத்த மறந்துவிட்டது. விழாவிற்கு வருவோர், தேவாலயத்தில் தங்க அனுமதிப்பதில்லை. அவர்கள் இயற்கை உபாதை கழிக்க, இரண்டு மாநகராட்சிகழிப்பறை மட்டுமே, அருகில் உள்ளன. இதனால், கடற்கரை பகுதி முழுவதும் கழிப்பறையாக மாற்றப்பட்டுள்ளது.பெண்கள், பெரும்அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால், தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர, ஆலய நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -