பதிவு செய்த நாள்
01
செப்
2017
02:09
ஊட்டி: ஊட்டியைச்சேர்ந்த ஜெயின் சமூக இளம் பெண், அலங்கார வாகனத்தில், ஊர்வலமாக வந்து மக்களுக்கு தான, தர்மங்களை செய்து, துறவற வாழ்வில்தன்னை அர்ப்பணித்தார். ஜெயின் சமூகத்தைச்சேர்ந்தவர்கள், மகாவீரரின், ‘வாழு, வாழ விடு’ என்ற அகிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டிருப்பர். அவர்களில் சிலர், துறவற வாழ்க்கை மேற்கொள்கின்றனர். ஊட்டி மெயின் பஜாரில் வசிக்கும், ரமேஷ்சந்த் கோத்தாரி, மதுபாலா தம்பதிகளின் மகளான சேத்னா ஜெயின், 25, துறவற வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்த உள்ளார். அவர், சத்தீஸ்கர் மாநிலம்,துர்க் மாநகரில் பரம்பூஜ்ய ஆச்சார்ய விஜயராஜ்ஜி குருவின் முன்னிலையில், துறவற வாழ்க்கை மேற்கொ ள்ள உள்ளார். இதை முன்னிட்டு, அவரை துறவறத்துக்கு வழியனுப்பும் வகையில், ஜெயின் சமூகத்தார் சார்பில் நிகழ்ச்சி நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட அலங்கார ஊர்தியில், அவர் அழைத்து வரப்பட்டார். அப்போது, வழிநெடுகிலும் நின்ற மக்களுக்கு, சேத்னாஜெயின், தான, தர்மங்களை செய்தார்.
துறவற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளசேத்னா, பி.பி.எம்., பட்டப்படிப்பு முடித்து, ஜைன மத படிப்பில், எம்.ஏ., பட்டம் வாங்கியுள்ளார். அவர் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில், புலமை பெற்றவர். சேத்னா கூறுகையில்,‘‘எனக்கு, சிறிய வயது முதல் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. அதில், துறவறம் செல்லும் நோக்கமும் இருந்தது. 2013ல் சென்னையில் நடந்த ஒரு துறவற நிகழ்ச்சியில், ஒரு எட்டு வயது சிறுவன்,‘நாம் ஏன் துறவறம் மேற்கொள்ள வேண்டும்’ என, பேசியது என்னை மிகவும் கவர்ந்தது. அந்த பேச்சு, என்னை முழுமையாக துறவறத்து செல்ல துாண்டியது. இதற்கு என் தாய் முழுஆதரவு தந்தார். எனது தந்தைக்கு நான் ஓரே பெண் என்பதால், முதலில் தயக்கம் இருந்தது. அதன்பின், அவரும் ஒப்பு கொண்டார். இனி வரும் காலம், பிறருக்கு சேவை செய்வதே எனது நோக்கம்,’’ என்றார். அவரது சித்தப்பாபூனம் கோத்தாரி கூறுகையில்,‘‘ சேத்னா மிகவும் புத்திசாலியான பெண்ணாக இருந்தார். அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்து மிகவும் சரியாக இருக்கும். அதனால், நாங்கள் அனைவரும் துறவறம் செல்ல அனுமதித்தோம்,’’என்றார்.
இதுதான் துறவறம்: துறவற வாழ்க்கை மேற்கொள்பவர்கள், சொந்த, பந்தம், சொத்து, சுகங்களை துறக்க வேண்டும். பற்று, பாசங்களை துறந்து, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். இவர்கள், வாழ்நாள் முழுக்க காலணி அணியாமல், நடை பயணமாக நகரங்கள், கிராமங்களாக சென்று, நல்ல தர்ம உபதேசங்களை போதிப்பர். கையில், பணம் வைத்திருக்க மாட்டார்கள். சாதாரண வெள்ளை உடை மட்டுமே அணிவர். ஆண்டுக்கு இருமுறை, தலையில் சாம்பல் போட்டு தடவி, கைகளாலேயே தங்களின் தலை முடியை பிடுங்கி எடுப்பர். இவ்வாறு பல்வேறு கடினமான சம்பிரதாயங்களுடன், மவுன விரதங்கள், உண்ணா நோன்புகளை மேற்கொள்வர்.