பதிவு செய்த நாள்
05
செப்
2017
03:09
புதுச்சேரி: புதுச்சேரியில் கேரள மக்கள் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. கேரள மக்களின் கலாசார சிறப்பு பண்டிகையான ஓணம் பண்டிகை நேற்று துவங்கி, 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று, புதுச்சேரியில் உள்ள கேரள குடும்பத்தினர், பாரம்பரிய உடை அணிந்து, வீடுகளில் பல்வேறு வகை பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டனர். ஜிப்மர் மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், மாணவ, மாணவியர் கேரள உடையணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, ஓணம் பண்டிகை கொண்டாடினர். ஓட்டல் மாகியில், முன்னாள் தலைமை செயலர் விஜயன் உள்ளிட்ட கேரள சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஓணம் பண்டிகை விருந்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமார், நிதிச் செயலர் கந்தவேலு, மருத்துவக் கல்லுாரி இயக்குனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.