பரமக்குடி : பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் புதிய மின்தேர் திருப்பணி துவக்க விழா நடந்தது. பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பவுர்ணமி இரவு அம்மன் மின் அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் உலா வருவது வழக்கம். இத்தேரானது பல ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டதால், புதிய மின்தேர் செய்வதற்கான திருப்பணி துவக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நிறைவடைந்து, புதிய தேர் கட்டும் பணி துவங்கியது. ஆயிர வைசியசபைத் தலைவர் பாலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஜெகன்நாதன், பொருளாளர் சுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரேஸ்வராள், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஸ்டிகள் ஜெயராமன், ரவீந்திரன், பாலசுப்பிரமணியன் உட்பட சபை நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.