வடமதுரை : அய்யலுார் வண்டிகருப்பண சுவாமி கோயில் காமிரா கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அய்யலுார் அடுத்த தங்கம்மாபட்டியில் வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் இந்துசமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் தற்போது வளர்ச்சி கண்டு அதிக பக்தர்கள் வருவதால் பலவகைகளிலும் வருமானம் அதிகரித்துள்ளது. தற்போது பூசாரிகள் தரப்பினருக்கும், நிர்வாகம் செய்யும் தரப்புக்கும் இடையே பிரச்னை உருவானது. வளாகத்தில் இருந்த அறங்காவலர் கார் மாயமான சம்பவத்திற்கு பின்னர் பனிப்போர் உச்சத்தை எட்டியது. ஒரு தரப்பினர் கோயில் உண்டியல் பணம் திருடப்படுவதாகவும், மற்றொரு தரப்பினர் பக்தர்களிடம் முறைகேடாக அதிக பணம் வசூலிப்பதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கிடையே பூசாரிகளை மாற்ற அறங்காவலர் தரப்பு முயன்றது. இதனால் சில பூசாரிகள் பணி அங்கீகாரம் கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இப்பிரச்னைகளால் இரு தரப்பினர் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டு பதட்டம் நிலவியது. தாசில்தார் தசாவதாரம் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில், கோர்ட் உத்தரவு வரும் வரை செயல் அலுவலரே தற்காலிக பூசாரிகளை நியமித்து பூஜைகள் நடத்துவது; காமிராக்கள் நிறுவுவது’ என முடிவானது. இதனையடுத்து கோயில் வளாகம் முழுவதும் பல இடங்களில் ’சிசிடிவி’ காமிரா நிறுவி கண்காணிக்கும் பணி நடக்கிறது. சின்னதாராபுரத்தில் கஞ்சிக்கலய ஊர்வலம்
சின்னதாரபுரம்: க.பரமத்தி அடுத்த சின்னதாராபுரத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், கஞ்சிக்கலய ஊர்வலம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த ஊர்வலம், அரசு கால்நடை மருந்தகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் வழியாக வழிபாட்டு மன்ற கோவிலை சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கஞ்சிக்கலயம், அக்னி சட்டி மற்றும் முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். பின் வேள்வி பூஜை நடத்தி வழிபட்டனர். பூஜை முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.