வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மாதாங்கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடந்தது. இக்கோயில் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. இங்கு சிவபெருமான் வாலகுருநாத சுவாமியாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவருக்கு அடுத்த சன்னதியில் அங்காளம்மன், மாதரசியம்மன் எழுந்தருளியுள்ளனர்.
கடந்த இரு வருடங்களுக்கு முன் சூறாவளிக் காற்றில் கோயிலின் மரம் விழுந்து கோயில் முற்றிலுமாக இடிந்தது. இதனையடுத்து கோயில் அறக்கட்டளை சார்பில் பக்தர்களிடம் நன்கொடை வசூல் செய்து புதிதாக கட்டுமானப்பணிகள் நடந்தன. இருவருடங்களாக நடந்து வந்த அப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் கணபதி ஹோமத்துடன் யாகபூஜைகள் துவங்கியது. வாஸ்து சாந்தி பூஜை, ரட்சாபந்தன வழிபாடும், கும்ப அலங்காரமும் நடந்தது. 2ம் நாள் மகாவேள்வி பூஜையும், கோபூஜை, 3 ம் கால யாகபூஜைகளும் நடந்தது. பின்னர் பூஜிக்கப்பட்ட கும்பநீரை சிவாச்சார்யார்கள் ஊர்வலமாக கோயிலை சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு அபிஷேகம் செய்தனர். அபிஷேக நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுவாமிக்கும், அம்மன்களுக்கும் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி புஷ்ப அலங்காரத்திலும், அம்மன் இருவருக்கும் மாங்கல்யம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. அறக்கட்டளை செயலாளர் தங்கவேலு, பொருளாளர் வேலுச்சாமி, தங்கராஜ் உட்பட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.