பதிவு செய்த நாள்
20
செப்
2017
12:09
ஈரோடு: மகாளய அமாவாசையை முன்னிட்டு, காவிரிக்கரையில் முன்னோர்களுக்கு ஏராளமான மக்கள், திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். புரட்டாசி மகாளய அமாவாசை, முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட, உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நிலையில் மகாளய அமாவாசை தினமான நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில், அதிகாலை முதலே மக்கள் குவியத் தொடங்கினர். முன்னோர்களுக்கு எள், பிண்டம் வைத்து தர்ப்பணம் கொடுத்தனர். பின், தர்ப்பண ஜலத்தை, ஆற்றில் கரைத்து வழிபட்டனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால், காவிரிக் கரை களை கட்டியது. கொடுமுடியில் குறைந்த கூட்டம்: மஹாளய அமாவாசை தினமாக இருந்தாலும், கொடுமுடியில் நேற்று பக்தர்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது. மகுடேஸ்வரர் கோவில் எதிரே உள்ள, காவிரி ஆற்றின் படித்துறையில், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும், தர்ப்பணம் செய்து புனித நீராடினர். பின்னர் மகுடேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
கூடுதுறையில் அலைமோதிய பக்தர்கள்: வழக்கம்போல், பவானி, கூடுதுறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள், கூடுதுறையில் குவியத் தொடங்கினர். திதி, தர்ப்பணம், எள் தண்ணீர் விடுதல், பிண்டம் வைத்து பரிகாரம் செய்தனர். பின், ஆற்றில் குளித்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பவானி டி.எஸ்.பி., ஜானகிராம் தலைமையில், இன்ஸ்பெக்டர் இளங்கோ உட்பட போலீசார், பாதுகாப்பில் ஈடுபட்டனர்.