பதிவு செய்த நாள்
20
செப்
2017
12:09
தர்மபுரி: மகாளய அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரி வெளிப்பேட்டை தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில், காவிரியில் இருந்து யாகம் செய்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தை கொண்டு, அம்மனுக்கு அபி?ஷகம் செய்யப்பட்டது. பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊர்வலம் நடந்தது. வெளிப்பேட்டைதெரு, கடைவீதி, ஹரிஹரநாத சுவாமி கோவில் தெரு, மகாத்மாகாந்தி சாலை உட்பட, முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், எஸ்.வி.,ரோடு, அங்காள அம்மன் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது.பென்னாகரம் தாலுகா, நெருப்பூர் அருகே உள்ள முத்தத்திராயன் கோவிலுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் வைத்தும், மொட்டையடித்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இதையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஒகேனக்கல் காவிரி ஆற்றில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். கிருஷ்ணகிரியில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, பசுமாட்டிற்கு கீரை மற்றும் உணவை கொடுத்து, மக்கள் வழிபட்டனர். அனைத்து கோவில்களிலும் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.