பதிவு செய்த நாள்
22
செப்
2017
01:09
நாகர்கோவில்: நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா கொண்டு செல்லப்பட்ட சுவாமி சிலைகளுக்கு, மன்னர் குடும்பத்தினரின் மேற்பார்வையில் பூஜை நடக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிபட்டதாக நம்பப்படும் சரஸ்வதி சிலை உள்ளது. மன்னர் காலத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின், நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்டது. எனினும் பத்னாபபுரம் அரண்மனையில் உள்ள சரஸ்வதி தேவி சிலை பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அந்த மரபு இன்றும் மாற்றப்படாமல், நவராத்திரி விழா சிறப்பாக நடக்கிறது.
பத்மனாபபுரம் சரஸ்வதி தேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள் திருவனந்தபுரம் சென்ற பின், பத்மனாப சுவாமி கோயில் அருகே பத்மதீர்த்தக்கரை நவராத்திரி மண்டபத்தில் விழா தொடங்குகிறது. 9 நாட்களிலும் காலையிலும், மாலையிலும் அலங்கார தீபாராதனை, அர்ச்சனை, நைவேத்யம் போன்றவை மன்னர் குடும்பத்தினரின் மேற்பார்வையில் நடக்கும். நவராத்திரி பூஜை நேற்று தொடங்கியது. செப்.,30-ல் வித்யாரம்பம் என்ற ஏடு தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு, சரஸ்வதி அம்மனுடன் சென்ற வேளிமலை முருகன், செந்திட்டை கோயிலில் இருந்து கரமனை அருகே பூஜைப்புரை நவராத்திரி மண்டபத்தில் வேட்டைக்கு எழுந்தருளுவார். அக்.,1ல் நல்லிருப்பு என்ற விரத நிகழ்ச்சி நடக்கும். அக்.,2ல் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும பவனி அக்.,4ல் பத்மனாபபுரம் வந்தடையும்.