பதிவு செய்த நாள்
27
செப்
2017
01:09
பவானி: பவானியில், 1,800 கொலு பொம்மைகளை வைத்து, நவராத்திரி திருவிழாவை, தம்பதியினர் கொண்டாடி வருகின்றனர். பவானி, காமராஜ் நகர், கவுண்டர் வீதியில் வசித்து வரும் தம்பதியர் பிரகாசம்- ஜெயலட்சுமி. இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக, நவராத்திரி விழா கொண்டாடி வருகின்றனர். தற்போது நவராத்திரி விழா நடக்கிறது. இதையொட்டி, தங்கள் வீட்டில், கடந்த, 21 முதல், 56 படிகள் அமைத்து, 1,800 கொலு பொம்மை வைத்து, வழிபாடு நடத்தி வருகின்றனர். காலை, மாலை என இரு வேலைகளிலும் பூஜை நடத்தி, அக்கம்பக்கத்தினருக்கு பிரசாதம் வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக நவராத்திரி விழா கொண்டாடுகிறோம். இந்தாண்டு, 56 படிகளில், 1,800 கொலு பொம்மை வைத்துள்ளோம். ராமர் பிறந்தது முதல் ஆட்சி ஏறுவது வரை, மக்களுடன் கலந்து வாழ்ந்த கண்ணனின் கதை, வசுதேவன் தேவகி (மணமக்கள்) மறு வீடு அழைத்து வருதல், அழகனின் (முருகன்) பிறப்பும் அவன் ஆறுபடை வீடுகளும், மக்களுக்காகவே வாழ்ந்த மன்னனின் கதை, மகளிர், ஆடவர் விவசாய கல்லூரி, தசாவதாரம், இமயமலை பகுதி, திருமலையில் நடைபெறும் கருடசேவை, வாஸ்து லட்சுமி, சத்தியநாராயணன் என பல முக்கியம் வாய்ந்த கொலு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.