பதிவு செய்த நாள்
27
செப்
2017
02:09
மாமல்லபுரம்;திருப்பதி பிரம்மோற்சவத்தில், மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை சார்பில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவையாற்றி, பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட உள்ளது.தமிழக இந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில், ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை இயங்குகிறது.
கடலோரம்: மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலியைச் சேர்ந்த ஆளவந்தார் நாயகர்,ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கடலோர மணற்பகுதியில், சவுக்கு பயிரிட்டு, அரசுக்கு உதவினார். இதையடுத்து, அன்றைய அரசு நிர்வாகம், ௧,௦௦௦ ஏக்கருக்கும் மே லான நிலத்தை, அவருக்கே தானமாக வழங்கி கவுரவித்தது.
ஆயிரங்காணி ஆளவந்தார் என விளங்கிய அவர், வைணவ ஆன்மிகம்,அறச்செயல்களில் ஈடுபாடு கொண்டு, அவரதுசொத்துக்களை உயில் சாசனம் மூலம், அரசிடம் ஒப்படைத்தார். அதன் வருவாயில், மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை, நித்யகல்யாண பெருமாள், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்களில், உற்சவம் நடத்தி, அன்னதானம் வழங்க, உயிலில்குறிப்பிட்டுள்ளார்.
அன்னதானம்: சொத்துக்களை பாதுகாத்து பராமரிக்க, அவரது விருப்பத்தை நிறைவேற்றவே, மேற்குறிப்பிட்ட அறக்கட்டளை செயல்படுகிறது. அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோற்சவ விழாவில், நாலாயிர திவ்விய பிரபந்த சேவையாற்றி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.அதன்படி, 130ம் ஆண்டு சேவையாக, தற்போதைய பிரம்மோற்சவத்தில், நாளை மறுநாள் துவங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை, பாகவதர்கள் நாலாயிர பிரபந்தபாடல்கள் பாடுவர்.பக்தர்களுக்கு மூன்றுவேளை அன்னதானம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை, செயல் அலுவலர், ஜெயசந்திரன், ஊழியர்கள் செய்துஉள்ளனர்.