பதிவு செய்த நாள்
27
செப்
2017
02:09
சென்னை: திருப்பத்துார் அருகே உள்ள கணமாத்துாரில், 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் மோகன் காந்தி, முன்னாள் காப்பாட்சியர் மகாந்தி, இன்ஜினியர் மணி ஆகியோர், கணமாத்துாரில், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 4 அடி உயரம், 2.5 அடி அகலம் உள்ள, சமணர் சிலையை கண்டெடுத்தனர். அச்சிலை, ஆடைகள் இன்றி, கால்களை மடக்கிய நிலையில், கையை பாதத்தின் மீது வைத்த நிலையில் உள்ளது. அது, சமண சமயத்தின், 24 தீர்த்தங்கரர்களில் ஒருவரான, மகாவீரர் சிலை. அதில், வலது கால், வலது கை மேலும், இடது கால், இடது கை கீழும் வைத்துள்ளது போல் அமைக்கப்பட்டுள்ளது; 9ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. சைவ சமய எழுச்சியால், தமிழகத்தில், 7ம் நுாற்றாண்டில், சமண சமயம் அழிவுற்ற போதும், கணமாத்துாரில், 9ம் நுாற்றாண்டு வரை, செழிப்புற்று இருந்துள்ளது என், தொல்லியல் அறிஞர்கள் கூறினர்.