பதிவு செய்த நாள்
30
செப்
2017
11:09
அன்னுார், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னுார் மன்னீஸ்வரர் கோயிலில், 1.5 கோடி ரூபாயில், திருப்பணி நடக்கிறது; டிச., 5ல், கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவை மாவட்டம், அன்னுாரில், மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இறைவன் மேற்கு நோக்கி வீற்றிருப்பதால், ’மேற்றலை தஞ்சாவூர்’ என்றழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில், பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமையும், ஞானிகளால் வழிபடப்பட்ட பிரசித்தியும் பெற்றது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், மார்கழி மாதம், தேரோட்டம் நடக்கிறது.
இங்கு நடக்கும், சிவராத்திரி விழாவில் பல ஆயிரம் பக்தர்கள், பங்கேற்கின்றனர். இங்கு நடக்கும், பிரதோஷ வழிபாடு, சிறப்பு பெற்றது. தட்சிணாமூர்த்தி சன்னதியில், எப்போதும் பக்தர்கள் குவிந்திருப்பர். பிரசித்தி பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம், 2004ல், நடந்தது. இதையடுத்து, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய, முடிவு செய்யப்பட்டது. கோவிலில் வளாகத்தில், 70 அடி நீளம், 50 அடி அகலம், 16 அடி உயரத்தில், வசந்த மண்டபம் கட்டப்படுகிறது. மேலும், மன்னீஸ்வரர் சன்னதி முன், 30 அடிக்கு, 16 அடி மண்டபமும், அருந்தவச் செல்வி அம்மன் சன்னதி முன், 16க்கு 30 அடி, மண்டபமும் கட்டப்படுகிறது. கன்னி மூல கணபதி சன்னதியில், புதிதாக விமானம் அமைக்கப்படுகிறது. முருகன், பள்ளியறை, அம்மன் சன்னதிகளுக்கு மேல் உள்ள விமானங்களில், பழைய சுதைகள் அகற்றப்பட்டு, புதிதாக சுதைகள் அமைக்கப்படுகின்றன. கோவில் முழுவதும், வர்ணம் பூசப்பட உள்ளது. இந்த திருப்பணிகள் 1.50 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. டிச., 5ல் கும்பாபிஷேகம் செய்ய, திட்டமிட்டுள்ளனர்.