பதிவு செய்த நாள்
06
டிச
2011
11:12
திருநெல்வேலி : நெல்லை தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ராகவேந்திரரின் பரமகுருவான விபுதேந்திர தீர்த்தர் பிருந்தாவனத்தில் ஆராதனை மஹோத்ஸவம் நடந்தது. மத்வாச்சாரியார் வழியில் ஸ்ரீ பத்மநாப தீர்த்தர், ஸ்ரீ ஜய தீர்த்தர் வழிவந்தவர் ஸ்ரீ விபுதேந்திர தீர்த்த சுவாமிகள். இவர் கடந்த 1435ம் ஆண்டு முதல் 1490ம் ஆண்டு வரை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, ஸ்ரீ மத்வரின் சித்தாந்தங்களை பரப்பி மக்களுக்கு நல்வழி போதித்துவந்தவர். இவரின் ஜீவ சமாதி நெல்லை சி.என்.கிராமம் தாமிபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. விபுதேந்திர தீர்த்தரின் ஆராதனை மஹோத்ஸவம் மார்கழி வளர்பிறை தசமி திதியான நேற்று ராகவேந்திரா மந்திராலயா மடத்தின் சார்பில் நடந்தது. காலையில் சுப்ரபாதம் பூஜை, மகா பஞ்சாமிர்த அபிஷேகம், ஞானயக்ஞம் மற்றும் அர்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை வித்வான் ஹாவேரி வேதவியாச்சர், ஆனந்த் தீர்த்தச்சாரிய பஞ்சமுகி மற்றும் மந்திரலாயம் மடம் வித்வான்கள் நடத்தினர். ஏற்பாடுகளை சென்னை மந்திராலயம் மடம் மேலாளர் வேணுகோபாலச்சாரியார், சந்தானகிருஷ்ணன் செய்திருந்தனர். இதில் பாலாஜி, சி.என்.கிராமம் இசக்கிப்பாண்டி, ஐ.ஓ.பி., கோபால் மற்றும் சென்னை ராகவேந்திரா மகளிர் குழு, நெல்லை தாமிரபரணி பஜனை மண்டலி, ராகவேந்திரா டிரஸ்ட் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சுவாமிகள் வருகை: விபுதேந்திர தீர்த்தர் சுவாமிகள் ஆராதனை விழா 4ம் தேதி துவங்கி 8ம் தேதி வரை நெல்லை சி.என்.கிராமம் தாமிரபரணி நதிக்கரையில் நடக்கிறது. இதில் மத்வாச்சாரிய மூல மகா சமஸ்தானம் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ சுய தீந்திர தீர்த்தர் சுவாமிகள் வரும் 8ம் தேதி நெல்லை வருகிறார். குறுக்குத்துறையில் அமையவுள்ள ராகவேந்திரர் மிருத்திகா பிருந்தாவனத்திற்கு சுவாமிகள் பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார். மூல ராமர் பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளை சுவாமிகள் நடத்துகிறார்.