பதிவு செய்த நாள்
06
டிச
2011
04:12
திருப்புவனம்: மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக மொகரம் பண்டிகையில் இந்துக்கள் தீமிதிக்கும் திருவிழா திருப்புவனம் அருகே முதுவன்திடலில் நடந்தது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திலிருந்து 6 கி.மீ.,தூரமுள்ள முதுவன்திடலில் 500 இந்து குடும்பங்கள் உள்ளன. ஆரம்ப காலத்தில் இங்கு முஸ்லிம்கள் அதிகளவில் வசித்தனர். நாளடைவில் நகர் பகுதிக்கு அவர்கள் சென்று விட்டனர். முஸ்லிம்கள் வழிபட்ட பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலை, இந்துக்கள் காவல்தெய்வமாய்,குலதெய்வமாய் வழிபடுகின்றனர். மொகரம் மாதத்தில் அமாவாசை முடிந்து, பிறை தெரிந்த மூன்றாம் நாளில் தீமிதிப்பதற்கு பள்ளம் தோண்டுதல், ஐந்தாம் நாள் காப்புக்கட்டுதலுடன் விழா துவங்குகிறது. ஏழாம்நாள் அசேன், உசேன் உருவத்துடன் சப்பரம் உலா வருதல் நடக்கிறது. ஒன்பதாம் நாள்முடிந்து அதிகாலை 4 மணிக்கு காப்புக்கட்டியவர்கள் தீமிதிக்கின்றனர். தீமிதிப்பதற்கு முன் சிலம்பாட்டம் ஆடி ஊரை வலம் வருகின்றனர். அதிகாலை 3.45 மணிக்கு, 3 சிறுவர்கள் உட்பட 23 ஆண்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். பெண்கள் தம் பங்கிற்கு திருமண தடை நீங்கிடவும், விவசாயம் செழித்திடவும், நோய் நொடியின்றி மக்களை காத்திடவும் வேண்டுகின்றனர். அதிகாலையில் குளித்துவிட்டு, ஈரத்துணியால் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு உட்காருகின்றனர். தீக்கங்குகளை மண்வெட்டியால் எடுத்து பெண்கள் தலைமீது கொட்டுகின்றனர். அருகேயுள்ளவர்கள் பாத்திமா, பாத்திமா என கோஷம் எழுப்புகின்றனர். இதனை பூ மொழுகுதல் என்கின்றனர். எந்தக்காரியங்கள் துவங்கினாலும், பாத்திமா நாச்சியாருக்கு முதலில் காணிக்கை செலுத்துவதும், பயிர் அறுவடையின் போது படைப்பதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இங்குள்ள மகளிர் குழு, கபடிக்குழுவுக்கு பாத்திமா நாச்சியார் பெயர் சூட்டுவதால் வெற்றி வாகை சூடுவதாகவும் நம்புகின்றனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் தீமிதி திருவிழாவைக்காண வெளிநாட்டினரும் வருகின்றனர்.