பதிவு செய்த நாள்
07
டிச
2011
11:12
பழநி : முல்லைப் பெரியாறு பிரச்னையால், பழநி-பாலக்காடு வழி சபரிமலை செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் திரும்பிய பக்தர்கள், அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பெரியாறு பிரச்னையால் குமுளி அருகே தமிழக எல்லையில் போக்குவரத்து பாதித்துள்ளது. பக்தர்கள், குமுளி அருகே வெகுநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பலர், பழநி, பொள்ளாச்சி, பாலக்காடு வழி செல்கின்றனர். இதனால் வாகனங்களுக்கு கூடுதல் வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. குறிப்பிட்ட நாளில் ஊர் திரும்ப முடியவில்லை. சபரிமலையில் இருந்து நேற்று பழநி வந்த பக்தர்கள் பெரும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியது:
பி.பன்னீர்செல்வம், சென்னை அம்பத்தூர்: தமிழக, கேரள எல்லையில், போலீசார் நெரிசலைக் குறைப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றனர். கேரளாவில் வாகனங்கள் உடைக்கப்பட்டு நடுவழியில் நின்ற போதும், போலீசார் கண்டுகொள்ளவில்லை. கேரளாவின் பிடிவாதத்தால் அப்பாவி பக்தர்கள் பாதிப்படைகின்றனர்.
சி.உமாசங்கர், வேன் டிரைவர், சேலம்: கேரள எல்லையில் நுழைந்த சில அடி தூரத்தில், கும்பல் கும்பலாக கற்களை வீசுகின்றனர். வண்டிப்பெரியார் அருகே முண்டகாயம் பகுதியில் முகாமிட்டுள்ள கும்பல், தமிழர் வாகனங்களை தாக்குகின்றனர். கேரள எல்லையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. குமுளி-எரிமேலி இடையே பிரச்னைகளை, போலீசார் கண்டுகொள்ளவில்லை. குற்றாலம், செங்கோட்டை மற்றும் பொள்ளாச்சி, பாலக்காடு வழியிலும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.
கே.ரவி, வேன் டிரைவர், சென்னை: பஸ், வாகனங்களை சேதப்படுத்தி, டிரைவர்களிடம் பணம் பறிக்கின்றனர். சபரிமலை செல்லும் வாகனங்களுக்கு, மாநில வாரியாக நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக வாகனங்களுக்கான நிலக்கல் பகுதியில், கேரள கும்பல் நடமாட்டம் உள்ளது. அவ்வப்போது வாகனங்களை சூறையாடுகின்றனர். முண்டகாயம் தாக்குதலில், வேன் கண்ணாடியை சேதப்படுத்தினர். அங்கு நிறுத்தாமல் வந்ததால், லேசான காயங்களுடன் தப்ப முடிந்தது. தமிழக எல்லையை எட்டும் வரை, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணித்தோம்.
சுருளியில் குளித்து விரதம் முடித்தனர்: முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளஅரசியல் கட்சிகளின் அடாவடித்தனத்தால், தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாகபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளாவிற்குள் செல்லும் ஐயப்ப பக்தர்களையும், தற்போது கேரளகும்பல் தாக்கி வருகின்றனர். இதனால் கம்பம் பகுதியில் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாலையணிந்திருந்த நூற்றுக்கணக்கானோர், சுருளி அருவிக்கு சென்று, அருவியில் குளித்து, அங்கு உள்ள சுருளி வேலப்பர் முன்பாக மாலையை கழற்றி, விரதத்தை முடித்து கொண்டுள்ளனர். பலர் திருச்செந்தூர், பழநி என முருகன் கோயில்களுக்கு சென்றனர்.