பதிவு செய்த நாள்
06
அக்
2017
01:10
ஸ்ரீபெரும்புதுார் : திருவள்ளூரில் இருந்து, வீரராகவப் பெருமாள் ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளும் நிகழ்வு நாளை நடைபெறுகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகரின் அவதார தினம். வேதாந்த தேசிகரின் அவதார தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருள்வது வழக்கம். அதே போல், இந்த ஆண்டு புரட்டாசி, திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு, திருவள்ளூரில் இருந்து வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளும் நிகழ்வு, நாளை நடைபெற உள்ளது. இதற்காக, இன்று இரவு, 9:00 மணிக்கு, திருவள்ளூரில் இருந்து வீரராகவ பெருமாள் புறப்பட்டு, மணவாள நகர், செங்காடு, மண்ணுார், தொடுகாடு, ஆயக்கொளத்துார் வழியாக, நாளை ஸ்ரீபெரும்புதுார் வந்தடைவார். வேதாந்த தேசிகர் ஊர் எல்லையில், முன்ன தாகவே எழுந்தருளும் வீரராகவ பெருமாளை, பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு அழைப்பார்.
அதன் பின், ஸ்ரீபெரும்புதுார் வீதிகளில் புறப்பாடு நடந்து, காலை, 6:00 மணிக்கு ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீ அஹோபில மடத்திற்கு எழுந்தருளுவார். பக்தர்களின் பொது தரிசனத்திற்கு பின்,காலை, 9:30 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுார் மாடவீதிகளில் திருவாபரண திருமேனியுடன் வேதபாராயண மற்றும் தேசிக ஸ்தோத்ரங்கள் பாராய ணங்களுடன் புறப்பாடு கண்டருளி, 11:00 மணிக்கு, வேதாந்த தேசிகர் கோவிலை சென்றடைவார். அங்கு, மதியம், 1:00 மணிக்கு, வீரராகவப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். இரவு, 7:30 மணிக்கு, திருப்பாவை சாற்றுமறை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை, 4:00 மணிக்கு புறப்பாடு கண்டருளி, ஸ்ரீபெரும்புதுார் ஊர் எல்லையில், வீரராகவப் பெருமாளுக்கு பிரியாவிடை நடைபெறும். மதியம், 1:00 மணிக்கு, வீரராகவ பெருமாள் திருவள்ளூர் கோவிலை சென்றடைவார்.