பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09அக் 2017 12:10
கமுதி:கமுதி அருகே கைக்குத்தல் அரிசி அன்னதானத்துடன் 50 ஆடுகள் பலியிட்டு, பெண் தெய்வத்தை ஆண்கள் மட்டுமே வழிபடும் வினோத திருவிழா நடந்தது. ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இங்குள்ள கண்மாய் கரையில் உள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். இங்கு ஆண்டுக்கொரு முறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். பல நுாற்றாண்டுகளுக்குமுன் 5 ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர் தனது அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி, எல்லைபிடாரியம்மன் கோயில் உள்ள இந்த இடத்தின் அருகே வந்தவுடன் மாயமானாராம். பின்னர் முதல்நாடு கிராம மக்களின் அப்பெண் கனவில் வந்து நான் இந்த இடத்தில் தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் எனவும், என்னை ஆண்கள் மட்டும் ஆண்டுக்கொருமுறை கிடா வெட்டி வழிபடவேண்டும் என்றும், பெண்கள் அப்போது அப்பகுதிக்கே வரக்கூடாது எனவும் கூறியதால் ஆண்டுக்கொருமுறை ஆண்கள் மட்டுமே வழிபடும் இத்திருவிழா கொண்டாடபடுகிறது.
இந்த திருவிழா நடக்கும் தேதி அறிவித்ததில் இருந்து ஒரு வார காலத்திற்கு இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வர அனுமதியில்லை. இத்திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஆண்கள் ஒன்று கூடி பீடம் அமைத்து கைக்குத்தல் பச்சரிசி சாதம் செய்து, 50 கிடாய்களை பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டப்பட்டது. பீடத்திற்கு நேற்று காலை பூஜை செய்யப்பட்டு, பனை ஓலை, வாழை நார்களால் ஆன மட்டையில் அன்னதானம் வழங்கப்பட்டது. சாப்பாட்டினை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடுகள் அனைத்தும் அங்கேயே மண்ணில் புதைக்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இத்திருவிழாவிற்கு கமுதி உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.