பதிவு செய்த நாள்
10
அக்
2017
12:10
கோத்தகிரி: கோத்தகிரி ரங்கசாமி மலையில் அமைந்துள்ள ரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நடந்த சிறப்பு பூஜையில், நான்காயிரத்திற்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட, சோலுார்மட்டம் பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ரங்கசாமி மலையில், பழங்குடி மக்களால் பூஜிக்கப்படும் ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும், புரட்டாசி சனிக்கிழமை நாட்களில், இந்த கோவிலில் ஐயனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இப்பூஜையில், நீலகிரி மாவட்டம் உட்பட, மேட்டுப்பாளையம், காரமடை, ஆலங்கொம்பு, பவானிசாகார் மற்றும் சத்தியமங்கலம் உட்பட சமவெளி பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக, பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மூன்றாவது சனிக்கிழமையில் நடந்த சிறப்பு பூஜையில், இதுவரை இல்லாத வகையில், நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வனப்பகுதியில், 4 கி.மீ., தொலைவில் மலைப்பகுதிக்குள் நடைப்பயணமாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். வனத்துறை சார்பில், கரிக்கையூர் கிராம வனக்குழு மூலம், பக்தர்களிடம் இருந்து, ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கீழ்கோத்தகிரி ரேஞ்சர் செல்வம் கூறியதாவது: கிராம வனக்குழு மூலம், நுழைவு கட்டணம் வசூலிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாவட்ட வன அலுவலரின் ஒப்புதலுடன், ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு, முறையாக ரசீது வழங்கப்படுகிறது. மேலும், இந்த தொகை, ரங்கசாமி கோவிலுக்கு வரும் பக்தர்களால், வீசப்படும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் பணிக்கும், கரிக்கையூர் பழங்குடியினர் திட்டம் சாரா வளர்ச்சிப் பணிகளுக்கும் மாவட்ட வன அலுவலரின் அறிவுரைப்படி பயன்படுத்தப்பட உள்ளது. புரட்டாசி மாதம் மூன்று சனிக்கிழமைகளில் மட்டும், 25 ஆயிரத்து, 600 ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. வரும், 14ம் தேதி கடைசி சனிக்கிழமையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என நம்பப்படுவதால், வனப்பகுதியில் கூடுதலாக போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். இவ்வாறு செல்வம் கூறினார்.