பதிவு செய்த நாள்
07
டிச
2011
12:12
ஈரோடு: ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று கைசிக ஏகாதசி விழா நடந்தது.ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி நாள், கைசிக ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்துவது மிகவும் உகந்தது. மேலும் ஆண்டு முழுவதும் நடக்கும் பெருமாளுக்கான பூஜையில் நடந்த குறைகளை, கைசிக ஏகாதசி போக்குவதாகவும் வைணவம் தெரிவிக்கிறது.ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோவிலில், கைசிக ஏகாதசியன்று இரவு விடிய விடிய, 365 முறை வஸ்திரம் சார்த்தி, 365 முறை தாம்பூலம் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி, வெகுசிறப்பாக நடப்பது வழக்கம். வைகானச முறைப்படி பூஜா கைங்கர்யங்கள் நடக்கும், ஈரோடு கோட்டை கஸ்தூரி ரங்கநாதர் பெருமாள் கோவிலிலும், நேற்று கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசியையொட்டி, முதன் முறையாக கைசிக ஏகாதசி மஹோத்மிய விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு திருமஞ்சனம், அலங்காரம், ஆரத்தி ஆகிய பூஜைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு, 365 வஸ்திரங்கள் சார்த்தப்படும் வைபவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கோவில் செயல் அலுவலர் ரவி மற்றும் பட்டாச்சார்யர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.