பதிவு செய்த நாள்
11
அக்
2017
05:10
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடர்களில் சுவாமி சிவானந்தரும் ஒருவர். இவர் மிக மேலானவர். எனவே சுவாமி விவேகானந்தர் இவரை மகாபுருஷர் என்று அழைத்தார். மகாபுருஷ சுவாமிகளின் பாத மலர்களை சேர்ந்தவர்கள் நல்ல மாண்பை எய்தினர். அப்படி மகாபுருஷர் சுவாமி சிவானந்தரை சேர்ந்தவர்களுள் சுவாமி சித்பாவனந்தரும் ஒருவர் சின்னு என்னும் இளைஞர் சுவாமிகளை தரிசித்து ஆசிபெற்றான். அவருடைய தொடர்பால் நல் ஆசியால் மடத்தில் துறவியாக சேர்ந்தான். மகாபுருஷர் இளைஞனுக்கு த்ரயம்பக சைதன்யர் என்ற ப்ரம்மச்சர்ய தீட்சை செய்து வைத்தார். இளைஞனின் உயர்பண்புகளை கண்டு மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார். பின் சித்பவானந்த என்ற நாமத்தை வழங்கி சன்யாச தீட்சை அளித்தார். சித் என்றால் பேரறிவு என பொருள்படும் பேரறிவு சொரூபமாக ஆனந்த மூர்த்தியாக சுவாமிகள் விளங்கினார்.
அருள் மூவராகிய ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவியார், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்களை தமிழகத்தில் பரப்புவதில் தலையாய் பங்கு வகித்தார். அருள் மூவரின் செய்திகளை அனைவரும் புரியும் வண்ணம் தமக்கே உரிய பாணியில் பரப்பினார். எண்ணற்ற நூல்கள் எழுதி மக்களின் பல்வேறு சந்தேகங்களை நீக்கினார். ஆன்மீக வாழ்வு என்பது இதுதான் இப்படி அதை கடைபித்தால் போதும் என நல்மார்க்கத்தை காட்டி ஆன்மீக வாழ்வை எளிமைபடுத்தினார். அந்தஸ்து எதையும் பாராமல் அடி பணியும் அனைவரையும் ஆதரித்தார். சாமானிய மக்களும் அருள் மூவரை அடைந்திட அதற்கான பாதையை அகலத் திறந்து விட்டார். உயர்வோ, தாழ்வோ, வர்ணமோ வர்க்கமோ பாராமல் தூய்மையும் முக்தியில் நாட்டமும் உள்ளோரை நல்ல துறவிகளாக்கினார். பெண்களையும் துறவிகளாக்கி பெண்குலத்திற்கு பெருமை சேர்த்தார். மந்திரங்களை பெண்கள் ஓத கூடாது என கட்டுப்பாடுகள் இருந்த போது தாய் தந்தையரின் பெயரை குழந்தைகள் கூறுவதில் தடை எதற்கு? என தேவையற்ற கட்டுப்பாடுகளை தவிடு பொடியாக்கினார்.
குழந்தைகள் நற்குண வளர்ச்சி பெறுவதற்கு குதூகலத்துடன் கூடிய கல்வித் திட்டத்தை அளித்தார். கல்விதுறைக்கு சுவாமிகள் ஆற்றிய பங்கு மகோனதமானது. பெண் கல்விக்கு நல்ல வலிமை சேர்த்தார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவியார், சுவாமி விவேகானந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் கருத்துக்களும் கொள்கைகளும் சுவாமிகளினுடைய வாழ்வில் செயல்முறைக்கு வந்தது. திருவாசகம், தாயுமானவர் பாடல் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற தமிழ் வேத நூல்களை நன்கு பயன்படுத்தி அதற்கு இணையாக ஸ்ரீராமகிருஷ்ணரின் கருத்துக்களை கலந்து ஆன்மீக செய்திகளை பரப்பியதோடு நல்ல தமிழ் பணியும் செய்தார். திருவாசகம், பகவத் கீதை பாடல்கள் மற்றும் ஸ்லோகங்களுக்கு இணையான ராமகிருஷ்ண உபதேசத்தை மேற்கோள் காட்டி அனைத்துக் கருத்துக்களையும் எளிதில் புலப்படும்படி செய்தார்.
ஆன்மீக கருத்துக்கள் வெள்ளமென பரவி ஓட வேண்டும் என்ற சுவாமி விவேகனந்தரின் வாக்கிற்கிணங்க மேலாம் செய்திகளை அந்தர்யோகம் என்ற திட்டத்தின் மூலம் பரப்ப தமிழகம் முழுவதும் அவர் செய்த திக் விஜயம் மக்கள் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி குழந்தைகள், இளைஞர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரையும் தட்டி எழுப்பியது. நவீன பாரதத்தை உருவாக்க குருகுலக் கல்வியின் மூலம் நல்ல பிரஜைகளை சமுதாயத்திற்கு வழங்கிய பணி அதி அற்புதமானது. நல்ல துறவி ஒருவரின் தவ வாழ்வு சமுதாயத்திற்கு எத்துனை நன்மை பயக்கும் என்பது சுவாமிகளின் வாழ்வு தெளிவாக விளக்கும்.
தேடாத தேட்டினரே செங்கை துலாக்கோல்போல்
வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே
என்ற தாயுமானவரின் வாக்கின்படி எச்சூழலிலும் வளைந்து கொடுக்காத நேரான சமநிலை தவறாதவராக திகழ்ந்தார். அருள் மூவர் அருளிய செய்திகளை வாழ்ந்து அதை அனைவர்க்கும் பரப்பி அதன்படி வாழ முன்வருவோர்க்கு உதவி அருள் திருமூவர் பணியை பூரணமாக்கினார். சுவாமிகள் இன்றும் என்றும் தோன்றாத் துணையாக சித் ஆனந்த மூர்த்தியாக இருப்பார்.
மண்ணதனில் சின்னு என்னும் மாயோகி
மாந்தர்தம்பால் மாகருணை கொண்டதனால்
அருள்மூவர் தத்துவத்தை விளக்கி தந்த
வித்தகனார் விரைகழலை வாழ்த்துவோமே.