பதிவு செய்த நாள்
14
அக்
2017
12:10
திருப்பூர்: அவிநாசியிலிருந்து சென்ற பக்தர் குழு, கேதார்நாதர் கோவிலில், மஹா ருத்ராபிஷேகம் நடத்தி, கோவில் முழுவதும் மலர் மாலைகளால் அலங்கரித்தனர். சிவபெருமானின், 12ஜோதிர்லிங்க கோவில்களில், உத்தரகண்ட் மாநிலம், கேதார்நாத் உள்ள சிவன் கோவிலும் ஒன்று. இமயமலை சிகரத்தில் உள்ள இக்கோவில் பஞ்சபாண்டவர்களால் கட்டப்பட்டது. கேதாரிநாதர், கேதாரகவுரி நாயகியுடன் எழுந்தருளி, அருள்பாலிக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஸ்ரீதர்ம சாஸ்தாகாசித் திரை குழு சார்பில், ஆரூர் சுப்ரமணிய சிவம் தலைமையில், 150 பக்தர்கள் ஆன்மிக பயணமாக அங்கு சென்றனர். கேதாரநாதருக்கு, 108 வலம்புரி சங்கு அபிஷேகம், உலக நலன் வேண்டி மஹா ருத்ராபிஷேகமும் நடத்தப்பட்டது. இதற்காக மூன்று டன் எடையுள்ள மலர்கள், கோவையிலிருந்து விமானம் மூலம், கோதர்நாத் கொண்டு செல்லப்பட்டது. அவிநாசியிலிருந்து சென்ற , 25 பேர் கொண்ட குழுவினர், கோவில் மண்டபம் மற்றும் கோபுரம் முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்தனர். இது தவிர, ஏலக்காய், பாதாம், திராட்சை மற்றும் வெட்டிவேர் ஆகிய நறுமண பொருள் கொண்ட மாலைகளும், கேதாரநாதர் மற்றும் நாயகிக்கு அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மூன்று கிலோ ஏலக்காய்கொண்டு உருவாக்கப்பட்ட கிரீடமும் கேதாரநாதருக்கு சூட்டப்பட்டது.