பதிவு செய்த நாள்
19
அக்
2017
10:10
பழநி : தீபாவளி பண்டிகை, ஐப்பசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் யாகபூஜை, சிறப்பு வழிபாடு நடந்தது.தீபாவளி, ஐப்பசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 4.30 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும், அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ரோப்கார் இயங்காததால் வின்ச் ஸ்டேசனில் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல் கோயில்களில் தீபாவளியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அபிராமி அம்மன் கோயில், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர் கோயில், வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர் கோயில் மற்றும் தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தீபாவளி என்பதால் புத்தாடைகள் அணிந்து வந்து மக்கள் சாமி தரிசனம் செய்தனர். பிரசாதமும் வழங்கப்பட்டது.
சின்னாளபட்டி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு செட்டியபட்டி சித்ரலேகா சமேத குபேரர், மகாலட்சுமி கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக, பரிவார மூர்த்திகளான குபேர கணபதி, குபேர லிங்கத்திற்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. மூலவருக்கு, திரவிய அபிேஷகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயில் மற்றும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள், வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 30 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன், மூலவர், உற்சவர், நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், ஆன்மீக சொற்பொழிவு நடந்தது. தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி ராமலிங்கசுவாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில், குட்டத்துப்பட்டி ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், வெல்லம்பட்டி மணி சித்தர் பீடத்திலும் அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.