பதிவு செய்த நாள்
20
அக்
2017
12:10
தர்மபுரி: கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள கோவில்களில், பெண்கள் சுவாமிக்கு படையல் வைத்து வழிபாடு செய்தனர். தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் வரும் அமாவாசையில், சுமங்கலி பெண்கள், கேதார கவுரி நோன்பு இருப்பது வழக்கம். தங்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், வீட்டில், மங்கள நிகழ்ச்சிகள் தொடரவும், கேதார கவுரி விரதத்தை, சுமங்கலி பெண்கள் மேற்கொள்வர். அதன்படி, நேற்று கேதார கவுரி விரதம் இருந்து, கோவில்களில் சுவாமிக்கு படையல் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர். புதிதாக வாங்கிய முறத்தில், அதிரசம், வெல்லம், மஞ்சள், தாலிக்கொடி, தேங்காய், வாழைப்பழம், பூ உள்ளிட்ட பூஜை பொருட்கள் வைத்து, வழிபாடு செய்தனர். தர்மபுரி பிடமனேரி மாரியம்மன் கோவிலில், நேற்று திரளான பெண்கள், காலை முதல் மாலை வரை கேதார கவுரி விரதம் இருந்து, படையல் வைத்து வழிபாடு செய்தனர். இதேபோல், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், வெளிபேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி.ரோடு அங்காளம்மன் கோவில், அன்னசாகரம் மாரியம்மன் கோவில், பாலக்கோடு சக்தி மாரியம்மன் கோவில், இண்டூர் கருமாரியம்மன் கோவில், அதியமான்கோட்டை மாரியம்மன் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில், கேதார கவுரி விரதத்தை முன்னிட்டு, நேற்று பெண்கள் படையல் வைத்து வழிபாடு செய்தனர்.