Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

காலாங்கிநாதர் காலாங்கிநாதர் காக புஜண்டர் காக புஜண்டர்
முதல் பக்கம் » 18 சித்தர்கள்
கொங்கணர்
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 நவ
2010
14:52

திருவாவடுதுறையில் இருந்து கிளம்பிய ஒரு ஒளிக்கீற்று, அந்த இளைஞனின் கண்களை  தாக்கியது.ஆம்...அதே தான்! எனக்கு தேவையான அஷ்டமாசித்திகளை அருளும் தேவதை அங்கு தான் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஒளி கிளம்பியதோ, அந்த இடத்துக்கு நான் சென்றாக வேண்டும். அந்த தேவதையின் தேஜஸே, இப்படி ஒரு வெளிச்சமாக என் கண்களில் பரவியிருக்க வேண்டும். புறப்படுவோம். என் ஆன்மிக சந்தேகங்கள் அனைத்துக்கும் அங்கு தான் விடை கிடைக்கப் போகிறது, என்று மகிழ்ந் தான் அந்த இளைஞன்.இன்றைய கேரளத்தில், கொங்கணப்பிரதேசம் என்று சொல்லக்கூடிய பகுதியிலுள்ள காட்டில் அவனது குடில் இருந்தது. அவனது பெற்றோர் வேட்டைக்காரர்கள். வேடர் பரம்பரையில் பிறந்தவன் அந்த இளைஞன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், இரவோடு இரவாக காட்டை விட்டு கிளம்பியவன், நாட்டுப்புறத்துக்குள் நுழைந்தான். உலகமக்கள் ஆசையில் மூழ்கி, செல்வத்தை சேர்க்க அங்குமிங்கும் ஓடுவதைக் கண்ட அவனுக்கு சிரிப்பும், அழுகையுமாய் மாறிமாறி வந்தது.அட உலகமே! நீ செல்வத்தை சேர்த்து என்ன சாதிக்கப் போகிறாய். சித்திகளை படித்து தேர்ந்தால், இறைவனை அடைந்து விடலாமே! இறைவனிடம் சென்று விட்டால், உனக்கேது பசி, பட்டினி, ஆசை, தூக்கம், துக்கம் இதெல்லாம்... எதன் மீதுமே பற்றின்றி வாழலாமே, என சிந்தித்தபடியே, ஒளி வந்த திசை நோக்கி நடந் தான் அந்த இளைஞன்.தமிழகத் துக்குள் நுழைந்த அவன், தஞ்சாவூர் இருக்கும் பகுதியைத் தாண்டி வந்த போது, திருவாவடுதுறை என்ற புண்ணிய தலம் தென்பட்டது. அங்கே, தன் மீது ஒளியைப் பாய்ச்சிய ஒரு சித்தர் தவத்தில் அமர்ந்திருந்தார். அவரது பாதங்களில் விழுந்து, அவர் கண் விழிக்கட்டுமே என காத்திருந்தான்.அவர் கண்களைத் திறந்தார். வா இளைஞனே! நீ இங்கு வருவாய் என்பதை நான் அறிவேன். உன் பெயர் இன்னதென்று கூட எனக்குத் தேவையில்லை.

நீ கொங்கண தேசத்தில் இருந்து வந்தவன் என்பதால், உன்னை நான் கொங்கணா என்றே அழைப்பேன். அஷ்டமாசித்திகளை அடைய விரும்பி நீ வந்துள்ளாய், அவையே உன்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் என நம்புகிறாய். அஷ்டமாசித்திகள், என்பவை மனித குலத்துக்கு நீ பல பயனுள்ளவற்றைச் செய்யவும் பயன்படும் என்பதை மறக்காதே, என்றதும், தான் வந்த நோக்கத்தை அப்படியே இந்த சித்தர் புட்டுபுட்டு வைக்கிறாரே! என்று ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்த அந்த இளைஞன், குருவே! தங்களை யாரென நான் அறிந்து கொள்ளலாமா? தங்களுக்கு சித்தமானால், இந்த சிறியவனிடம் அதுபற்றி சொல்லுங்கள், என்றான் இளைஞன்.சித்தர் கலகலவென சிரித்தபடியே, கொங்கணா! இந்தக் கட்டையை  போகர் என்று அழைக்கிறது இந்த உலகம், என்றதும், ஆ...போகரா! தாங்கள் சித்தர்களிலேயே உயர்ந்தவர் அல்லவா! உமையவளின் கட்டளைக் கிணங்க, அவளது மகனுக்கே சிலை செய்தவராயிற்றே தாங்கள். நானும் அம்பாள் உபாசகன்... என்று தொடரும் போதே, இடைமறித்த போகர், கொங்கணா! அதையும் நான் அறிவேன். அம்பிகையின் பல வடிவங்களை நேரில் தரிசிக்க நீ எண்ணுகிறாய். அது நடக்குமோ நடக்காதோ என கலங்குகிறாய். அதற்காக அஷ்டமாசித்திகளைக் கற்று, அவற்றில் ஏதேனும் ஒரு வழிமூலம் அவளைப் பார்த்து விடத் துடிக்கிறாய். ஒன்றை மட்டும் மறந்து விடாதே. அம்பிகையை நேரில் காண ஒரே வழி தவம். நீ மனிதர்களே இல்லாத இடத்துக்குச் செல். அங்கே அமர்ந்து தவம் செய். இவ்வுலக சஞ்சாரத்தை மறந்து விடு. அம்பிகை உன்னைக் காண நேரில் வருவாள், என ஆசியருளினார். போகரிடம் பிரியாவிடை பெற்ற கொங்கணர், ஒரு மலைக்குச் சென்றார். அனைவரும் அமர்ந்த நிலையிலோ, நின்ற நிலையிலோ தான் தவம் செய்வர். ஆனால், கொங்கணர் ஒரு மலை உச்சியிலுள்ள பாறையில் படுத்து விட்டார். படுத்த நிலையிலேயே கண்மூடினார். அப்படியே, தவத்தில் ஆழ்ந்து விட்டார். போகர் சொன்னபடியே நடந்தது. அம்பாளின் பல வடிவங்களை அவர் நேரில் கண்டார்.அம்பிகையின் வடிவங்களை நேரில் கண்டதன் மூலம், தனது சக்தி அதிகரித்தது போல உணர்ந்த கொங்கணர், தவத்தில் இருந்து எழுந்தார். அவர் கண் திறக்கவும், தன் முன் ஒரு சமாதி இருப்பதைப் பார்த்தார். அந்த சமாதியை மூடியிருந்த பாறை தானாக உருண்டது. அதன் உள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டார். அவரை கொங்கணர் வணங்கினார்.

கொங்கணா! நீ அவசரக்காரனாக இருக்கிறாயே! அம்பிகையின் ஒரு சில வடிவங்களைப் பார்த்ததுமே உன் சக்தி அதிகரித்து விட்டதாக., நீயாகவே கருதிக் கொண்டு, தவத்தைக் கலைத்து விட்டாயே! அம்பிகைக்கு விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமான வடிவங்கள் உண்டு. அவற்றைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டாய். மீண்டும் தவம் செய். அவற்றை நீ காண்பாய், என்றார். அந்த முனிவர் யாரென கொங்கணர் விசாரித்த போது, நான் தான் கவுதமர் என்றார் அம்முனிவர். கண் விழித்து தவம் கலைந்ததால், அம்பிகையின் இன்னும் பல வடிவங்களைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை இழந்தாலும், ரிஷி தரிசனமாவது கிடைத்ததே என ஆறுதல் கொண்ட கொங்கணர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். ஆனால், அந்த தவம் சில காலமே நீடித்தது. சித்திகளை அடைய வேண்டும் என்ற மனஉணர்வு, தவத்தைக் கெடுத்து விட்டது. கொங்கணர் அங்கிருந்து புறப்பட்டு, தில்லையம்பதியான சிதம்பரத்தை அடைந்தார். இறைவன் ஆகாயமாக எழுந்தருளியிருக்கும் அந்த புண்ணிய பூமியில் அஷ்டமாசித்திகள் வேண்டி யாகம் தொடங்கினார்.அப்போது, யாக குண்டத்தின் முன்னால், இதற்கு முன்னதாகப் பார்த்த கவுதமர் தோன்றினார். கொங்கணா! மீண்டும் தவறு செய்கிறாய். அஷ்டமாசித்திகளை அடைவதால் பலனேதும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தினால், நம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற ஆணவமே உன்னுள் வளரும். தவமே இறைவனை அடைய உயர்ந்த பாதை. தவம் என்றால் கண்மூடி ஓரிடத்தில் அமர்வது என பலரும் தவறாகப் பொருள் புரிந்து கொண்டிருக்கின்றனர். தவத்தின் உண்மைப் பொருளை நீ தெரிந்து கொள்ள சில சந்தர்ப்பங்கள் கிடைக்கும். காத்திரு, என சொல்லிவிட்டு மறைந்தார். கவுதமரின் இந்த விமர்சனம், கொங்கணரைக் கவலை கொள்ளச் செய்தது. நாம், ஏன் இந்த பூமிக்கு வந்தோம். தவத்தின் பொருள் தெரிய சந்தர்ப்பங்கள் வரும் என்றாரே கவுதமர். அதை அறிந்து கொள்ள எங்கே செல்ல வேண்டும்? எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்? இப்படி பல சிந்தனைகள் அவரைக் குழப்பின. ஆனால், தவத்தின் பொருளை அவருக்கு உணர்த்த, இந்த பூமிப்பந்தின் ஒரு பகுதியில் காத்திருந்தாள் ஒரு பெண்.

ஒருமுறை தியானத்தில் அமர்ந்திருந்த கொங்கணர் மீது, உயரே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று எச்சம் போட்டது. பறக்கும் போதே எச்சமிடுவது பறவை களின் இயல்பு தான். நாம் கூட மரத்தடிகளில் நின்றால், பறவைகள் எச்சமிட்டு நம் உடைகள் அழுக்காகும். அதை துடைத்து விட்டு நடையைக் கட்டுவோம். கொங்கணர் சகல வல்லமை படைத்தவர் இல்லையா? ஆணவத்துடன் அவர் கொக்கை நோக்கிப் பார்த்தார். அவரது பார்வையின் தீட்சண்யம் தாளாமல் கொக்கு சாம்பலாகி உதிர்ந்து விட்டது.தன் தியானத்தைக் கெடுத்த கொக்கை சாம்பலாக்கிவிட்டதில் கொங்கணருக்கு பரமதிருப்தி, அகந்தை எல்லாம் ஏற்பட்டது. தான் தியானம் செய்யும் போது, யாராவது தனக்கு இடைஞ்சல் செய்தால், அவர்களுக் கும் இதே தான் கதி என்பது போல அவரது செய்கை அமர்ந்தது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஒருநாள், அவர் திருவள்ளுவரின் இல்லத்துக்குச் சென்றார்.யார் உள்ளே! எனக்கு பிச்சைப் போடு, பசிக்கிறது. நிறைய வேலை இருக்கிறது, என்று அதட்டலாகப் பேசினார். வள்ளுவரின் மனைவி வாசுகி, வெளியே இருந்து வந்த குரலைக் கேட்டார். அதிகார தோரணையுள்ள முகத்துடன் ஒரு துறவி நிற்பதைப் பார்த்தாள். அவர் கோபத்தில் பேசினாலும், அவள் அடக்கமாக, துறவியே! பொறுக்க வேண்டும், எனது கணவருக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறேன். பர்த்தாவுக்கு பரிமாறும் போது, இடையில் எழுந்து வந்ததே தவறு. இருப்பினும், நீர் ஒரு துறவி என் பதால், என் பர்த்தா இதை பொருட்படுத்தமாட்டார் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன். சற்று நேரம் திண்ணையில் அமரும். அவர் சாப்பிட்டதும், உமக்கு உணவெடுத்து வருகிறேன், என்று சொல்லிவிட்டு, அவர் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென வீட்டுக்குள் நடந்தாள். கொங்கணருக்கோ கோபம் எல்லை மீறி விட்டது. மீண்டும் கத்த ஆரம்பித்தார். ஏ பெண்ணே! துறவிகளுக்கு அன்னமிடுவது முதல் கடமை என்பது உனக்குத் தெரியாதா? அதிலும் நான் யார்? சகல சித்திகளும் கைவரப்பெற்றவன். என் தவத்தின் வலிமையை அறியாமல் பேசுகிறாய். உம்... இப்போது, உணவெடுத்து வருகிறாயா?  இல்லை...  உன்னையும்... என்று அவர் சொல்லி முடிக்கவும், கோபமடைந்த வாசுகி, மீண்டும் வெளியே வந்தாள்.

கொங்கணரே! உமக்கு மரியாதை தந்தது தவறாகப் போயிற்றே! என்னை என்ன செய்து விட முடியும் உம்மால்? பதிபக்தியே ஒரு பத்தினிப் பெண்ணுக்கு உயரிய குணம் என்பதை  கூட உணராத துறவியே! என்னைக் கொக்கென்று நினைத்துக் கொண்டீரா? என்றதும், கொங்கணருக்கு தூக்கி வாரிப்போட்டது. இவளுக்கு எப்படி தெரிந்தது என் பெயர் கொங்கணன் என்று! அத்துடன், இவள் கொக்கை எரித்த விஷயத்தை எப்படி அறிந்தாள்? அவர் அதிர்ச்சியுடன் அவள் முகத்தை ஏறிட்ட போது, கொங்கணரே! உம் சிந்தனை எனக்குப் புரிகிறது. ஒரு பெண் இறைவனை அடைய வேண்டுமானால், தவம் எதுவும் செய்யத் தேவையில்லை, பூஜை, புனஸ்காரங்கள் தேவையில்லை. கணவருக்கு பணிவிடை செய்வதே ஒரு பெண்ணுக்கு உயரிய தவம். நீர் தவம் என்றால் என்ன என்பது பற்றி அறியத்தானே இப்படி சுற்றித் திரிகிறீர்! என்னையும் விட உயர்ந்த ஒரு தபஸ்வி இந்த ஊரில் இருக்கிறார், என்றதும் கொங்கணர் அவள் முகத்தை ஆர்வத்துடன் நோக்கினார். தாயே! நீ என் அறிவுக்கண்ணை திறந்தது போல் இருக்கிறது. என் ஆணவம் அழிந்தது. அந்த தபஸ்வியை நான் பார்க்க வேண்டும். தவம் பற்றி அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர் எந்த இடத்தில் தவம் செய்து கொண்டிருப்பார்? என்றதும், வாசுகி கலகலவென சிரித்தாள். சுவாமி! அவர் தாடியும், ஜடாமுடியும் தரித்து கண்மூடி தியானத்தில் இருப்பார் என நினைக்கிறீரா! இல்லை...இல்லை...ஊர் எல்லையில் ஒரு இறைச்சிக்கடை இருக்கிறது. அந்தக்கடையின் உரிமையாளர் வீட்டில் போய் பிச்சை கேட்பது போல் நடியும், தவம் பற்றி இன்னும் தெரிந்து கொள்வீர், என்றாள். அவளிடம் பிச்சை வாங்கி அருந்திவிட்டு, அவர் ஆச்சரியத்துடன் இறைச்சி வியாபாரி வீட்டுக்குச் சென்றார். அதே அதிகாரத்தோரணையுடன், பிச்சை போடு எனக்கூவினார். வியாபாரி வெளியே வந்தான்.

ஐயா, கொக்கை எரித்த கொங்கணரே! வாசுகி அம்மையார் உம்மை அனுப்பினாரா? சத்தம் போடாதீரும். உள்ளே என் வயோதிகப் பெற்றோர் நோயின் கடுமையால் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்றனர். அவர்களது கை, கால்களை அமுக்கிவிட்டு, விசிறி தூங்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். உமக்கு  தெரியாதா? பெற்றவர்களுக்கு சேவை செய்வதே ஒரு மகனின் முக்கிய கடமையென்று. ஆணாகப் பிறந்த ஒருவன், தன்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் இறைவனை அடைந்து விடலாம். அதை விட உயர்ந்த தவம் ஏது? என்று அவன் சொன்னதும், கொங்கணருக்கு சுரீர் என முதுகெலும்பில் உறைத்தது போல் இருந்தது. ஆஹா! இவனுக்கு எப்படி நம்மைத் தெரிந்தது? வாசுகி வீட்டுக்குப் போய் வந்ததை இவன் எப்படி அறிந்தான்? என சிந்தித்தவர், உன் பெயர் என்ன? என்றார். தர்மவியாதன் என்று பதிலளித் தான் அவன். தர்மா! என்னை எப்படி உனக்குத்தெரியும்? என்றார்.ஐயனே! என்னைப் பெற்றவர்களுக்கு சேவை செய்வதையே உயரிய தவமாக நினைக்கிறேன். அந்த தவப்பலனால், முக்காலமும் உணரும் சக்தி எனக்கு இயற்கையாகவே வந்திருக்க வேண்டும் எனக்கருதுகிறேன். அதனாலேயே உம்மை எளிதில் அடையாளம் காண முடிந்தது, என்றான்.ஹா...ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையைச் செய்வதே தவத்திற்கு சமமானது, இதைப்புரிய இவ்வளவு நாளாகி இருக்கிறதே! என்றவர், தனக்கு நேர்ந்த அனுபவங்கள் சமூகத்திற்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில், அவற்றை நூல்களாக எழுதி வைத்தார். பின்னர் அவர் ஏழுமலையான் குடியிருக்கும் திருப்பதிக்குச் சென்றார். அங்கே வலவேந்திரன் என்ற மன்னன் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்தான். அவனுக்கு தவம் என்றால் கடமை என்பது பற்றி விளக்கினார். இது அவனுக்குப் பிடித்துப் போகவே, அவரது சீடன் ஆனான். அங்கேயே சிலகாலம் தங்கியிருந்து பல நூல்களையும் எழுதிய அவர் திருப்பதி திருமலையில் கோயில் குளத்தின் தெற்குப் பகுதியில், எட்டாம் படிக்கட்டில் அடக்கமாகி இருக்கிறார். அங்கே செல்பவர்கள் கொங்கணர் ஏற்படுத்தும் அதிர்வுகளை உணர முடியும்.

கொங்கணவர் இயற்றிய நூல்களாவன

கொங்கணவர் வாதகாவியம்  -3000
கொங்கணவர் முக்காண்டங்கள்  -1500
கொங்கணவர் தனிக்குணம்  -200
கொங்கணவர் வைத்தியம்  -200
கொங்கணவர் வாதசூத்திரம்  -200
கொங்கணவர் தண்டகம்  -120
கொங்கணவர் ஞான சைதன்னியம்  -109
கொங்கணவர் சரக்கு வைப்பு  -111
கொங்கணவர் கற்ப சூத்திரம்  -100
கொங்கணவர் வாலைக்கும்பி  -100
கொங்கணவர் ஞானமுக்காண்ட சூத்திரம் -80
கொங்கணவர் ஞான வெண்பா சூத்திரம் -49
கொங்கணவர் ஆதியந்த சூத்திரம்  -45
கொங்கணவர் முப்பு சூத்திரம்  -40
கொங்கணவர் உற்பத்தி ஞானம்  -21
கொங்கணவர் சுத்த ஞானம்  -16 என்பவை ஆகும்.

கொங்கணவர் சித்தர் தியானச்செய்யுள்:

கொக்கை எரித்த கொங்கணரே
அம்பிகை உபாசகரே
ஸ்ரீ கௌதமரின் தரிசனம் கண்டவரே
இரசவாதமரிந்த திவ்யரே
உங்கள் திருப்பாதம் சரணம்

காலம்: கொங்கணர் முனிவர் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகள் 16 நாள்கள்.

 
மேலும் 18 சித்தர்கள் »
temple

வான்மீகர் மார்ச் 06,2013

வான்மீகர் முனிவர் புரட்டாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 32 ... மேலும்
 
temple

உரோமரிஷி மார்ச் 06,2013

அஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் ... மேலும்
 
temple
இவர் பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாகப் ... மேலும்
 
temple

நந்தீஸ்வரர் மார்ச் 06,2013

நந்தீஸ்வரர் முனிவர் வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 700 ஆண்டுகள் 3 ... மேலும்
 
temple

மச்சமுனி மார்ச் 06,2013

மச்சமுனி ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 300 ஆண்டுகள் 42 நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.