பதிவு செய்த நாள்
26
அக்
2017
01:10
சேலம்: சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா, வாணவேடிக்கை, பக்தர்கள் கோஷத்துடன் கோலாகலமாக நடந்தது. சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் குமரகுரு சுப்ரமணியர் கோவிலில், கடந்த, 17ல் கந்தசஷ்டி விழா தொடங்கியது. நேற்று காலை, மகா கந்தசஷ்டி பாராயணம், 36 முறை பாடப்பட்டது. தொடர்ந்து, சஷ்டி சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதில், முருகன், வள்ளி தெய்வானையுடன் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, மாடவீதி வழியாக வந்த சுப்பிரமணியர், சூரனை வதம் செய்தார். இதில், ஏராளமானோர் சுவாமியை வழிபட்டனர். அதேபோல், ஜாகீர் அம்மா பாளையம், காவடி பழனியாண்டவர் கோவிலில், அதிகாலை முதல் சிறப்பு பூஜை, 108 வலம்புரி சங்காபி?ஷகம், லட்சார்ச்சனை நடந்தது. மாலை, சூரசம்ஹார லீலை நடந்தது.
* மகுடஞ்சாவடி, சுப்ரமணியர் கோவிலில், 11ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழாவையொட்டி, நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், 3:00 மணிக்கு, ரேக்ளா போட்டி நடந்தது. அதில், சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10 குதிரை, 5 காளை கன்று குட்டிகள் பங்கேற்றன. மகுடஞ்சாவடியில் இருந்து கன்னந்தேரி வரை நடந்த போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த வெங்கிட், பவானியைச் சேர்ந்த சிங்காரவேல், மோவிஷா ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்தனர். அவர்களுக்கு முறையே, 5,000, 4,000, 3,000 ரூபாய் பரிசு பெற்றனர். அதேபோல், காளை கன்று குட்டி பங்கேற்ற போட்டியில், சேலம் லோகநாதன், 3,000 ரூபாய், பாரப்பட்டி சுரேஷ், 2,000 ஆயிரம் ரூபாய் பரிசு பெற்றனர். போட்டியை, ஏராளமானோர் சாலை நெடுகிலும் கூடி ரசித்தனர்.
* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று மாலை, வாணவேடிக்கை, பக்தர்களின் அரோகரா கரகோஷத்துடன் முருகன், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி தத்ரூபமாக செய்திருந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மூலவர் பாலசுப்ரமணியர், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், வெள்ளை விநாயகர் கோவில், ஆறகளூர் காமநாதீஸ்வரர், முருகன் கோவில், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.