பதிவு செய்த நாள்
26
அக்
2017
01:10
தர்மபுரி: கந்த சஷ்டியையொட்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள முருகன் கோவில்களில், நேற்று சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், 53ம் ஆண்டு கந்த சஷ்டி விழா, கடந்த, 20ல், துவங்கியது. இதையொட்டி, தினமும், மூன்று கால சிறப்பு பூஜை நடந்தது. விழாவின் முக்கிய நாளான கந்த சஷ்டியை முன்னிட்டு, நேற்று காலை லட்ச்சார்ச்சனை நடந்தது. கோவில் மற்றும் கொடி மரத்தை, பக்தர்கள், 108 முறை வலம் வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, சிவசுப்பிர மணிய சுவாமி மற்றும் சூரபத்மன் திருவீதி உலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு, பைபாஸ் ரோட்டில் உள்ள சுவாமி நிலத்தில், சூரசம்ஹார விழா நடந்தது. இன்று இரவு, 9:00 மணிக்கு, தெய்வானை திருக்கல்யாணமும், பொன்மயில் வாகனத்தில் சுாவமி திருவீதி உலாவும் நடக்கிறது. இதேபோல், எஸ்.வி.,ரோடு முருகன் கோவில், குளியனூர் முருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் முருகன் கோவில் உள்பட, மாவட்டத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில், நேற்று கந்த சஷ்டி விழா நடந்தது.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில், காட்டிநாயனப்பள்ளி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், ஜெகதேவி, பர்கூர், தேவிரஅள்ளி, சுண்டகாபட்டி, மாதம்பதி, மருதேரி, பேறுஅள்ளி, போச்சம்பள்ளி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், நேற்று நடந்த கந்த சஷ்டி சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.