பதிவு செய்த நாள்
27
அக்
2017
12:10
தேனி, மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான முருகன், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் கந்த சஷ்டி விழா அக்.20ல் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை சூரசம்ஹாரம் நடந்தது. ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, முருகன் சம்ஹாரம் செய்து தீமை அழியும் உண்மையை உலகிற்கு உணர்த்தினார். விழாவின் ஏழாவது நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
*தேனி என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில்களில் வேதமந்திரங்கள் முழங்க முருகன்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் சுந்தரவேலவருக்கு வள்ளி- தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக உபயதாரர்கள், பக்தர்கள் சீர் கொண்டு வந்தனர். சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். அதன்பின் ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது.
கம்பம்: கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில், வேலப்பர் கோயில் மற்றும் கவுமாரியம்மன் கோயில்களில் நடைபெற்றது. அதையொட்டி முன்னதாக முருகன் - அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. தேவதானப்பட்டி: குள்ளப்புரம் அன்னபூரணி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணியசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதியுலா வந்தார். சுற்றுக்கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தரிசனம் செய்தனர். * பெரியகுளம் பாலசுப்பிரமணி கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.